நண்பர், காதலி என பல்வேறு உறவுகளுடன் தொடர்பில் இருக்கும் நாம், ஒரு சில சமயங்களில் நம்மை அறியாமலேயே அவர்களின் ஆதிக்கத்துக்குள் மூழ்கி இருப்போம். அதனை கண்டு, சரியாக கையாளாவிட்டால் மன ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கும் நீங்கள், மற்றொருவரின் கட்டளைக்கு கட்டுப்படும் நிலைக்கு சென்றுவிடுவீர்கள். நாளடைவில் அதில் இருந்து மீண்டுவர முடியாத நிலைக்கு செல்ல வாய்ப்புள்ளது. அப்படியான இடியாப்ப சிக்கலில் நீங்கள் தத்தளித்துக் கொண்டிருந்தால், ரிலேஷன்ஷிப் கவுன்சிலரை அணுகி உரிய தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும்.
ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் என்றால் என்ன? : ரிலேஷன்ஷிப் கவுன்சிலிங் என்பது இருவருக்கும் இடையில் இருக்கும் பிரச்சனைகளையும், வேறுபாடுகளையும் களைந்து, ஒருவரையொருவர் புரிந்து கொண்டு பரஸ்பர முடிவுகளை எடுக்க ஒத்துழைக்கும் மன நல ஆலோசனையாகும். நட்பு வட்டங்களில் உறவுச்சிக்கல் ஏற்படுவதைக் காட்டிலும் காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் அதிகம் ஏற்படும்.
மேலும், குடும்ப உறுப்பினர்கள், பணியிடத்தில் பணியாற்றும் சக பணியாளர் உள்ளிட்ட எந்த உறவுக்கும் கவுன்சிலிங் பெற்றுக்கொள்ளலாம். கவுன்சிலிங் பெற விரும்புபவர்கள் இருவரும், கவுன்சிலிங் கொடுப்பவரின் முன் ஆஜராக வேண்டும். தங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து மனம் திறந்து அவரிடம் தெரிவிக்க வேண்டும்.
பிரச்சனைகளுக்கு தீர்வு காண இருக்கும் ரிலேஷன்ஷிப் கவுன்சிலர், இருவரின் பிரச்சனைகளை பொறுமையாக தெரிந்துகொள்வார். பின்னர், யாரிடத்தில் எந்த பிரச்சனை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாக ஆலோசனை வழங்குவார். அவர் கொடுக்கும் தீர்வுகள் பெரும்பாலும் இருவரும் கடைபிடிக்க வேண்டி இருக்கும்.
ஆலோசனையின்போது இருவரையும் ஓரிடத்தில் அமர்ந்து, பின்னர் தனித்தனியாக என பல்வேறு வழிமுறைகளில் கவுன்சிலிங் வழங்குவார். அப்போது, நீங்கள் செய்யும் தவறுகளையும், நிதானமாக இருக்க வேண்டிய இடங்களையும் அடையாளம் காட்டுவார். இந்த கவுன்சிலிங்களை பெற்றால், பிரிய வேண்டிய நிலையில் இருக்கும் இருவர் கூட சேர்ந்து வாழ்வதற்கு வழி உண்டு.
திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை : காதலிக்கும் இருவருக்கும் இடையில் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படும். சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து காதல் வாழ்க்கையை துண்டித்துக்கொள்ளும் காதலர்கள் ஏராளம். அன்பிற்குரியவர்களை ஒருமுறை பிரிந்துவிட்டால், வாழ்க்கையில் மீண்டும் இணைவது என்பது சாத்தியமில்லாமல் போகும். இருவருக்கும் இடையே எழும் பிரச்சனைகளுக்கு ஒரு கட்டத்தில் தீர்வு காண இயலாதபோது ரிலேஷன்ஷிப் கவுன்சிலரை அணுகுவது நல்லது. அவரிடம் தக்க ஆலோசனை பெற்று, உங்களால் எதிர்காலத்தில் சேர்ந்து வாழ முடியுமா? அல்லது உறவை கைவிடலாமா? என்ற முடிவை எடுப்பது சிறந்தது.
திருமணத்துக்கு பிந்தைய ஆலோசனை : கனவுலகை போன்று காதல் வாழ்க்கை இருந்தாலும், திருமண வாழ்க்கை எதார்த்தத்தை பிரதிபலிக்க கூடிய ஒன்றாக இருக்கும். கணவன் - மனைவி இருவரும் அனைத்து சந்தர்பங்களிலும் நிதானமாக யோசித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். இருவருக்கு இடையே பிரச்சனை ஏற்படுவது இயல்பு என்றாலும், சேர்ந்துவாழ முடியாது என்ற சிந்தனைக்கு செல்வது இருவருக்கு இடையே இருக்கும் பிரச்சனையின் உட்சபட்ச நிலையாகும். திருமணத்துக்கு முன்பு எடுக்கிற முடிவுகளைபோல், திருமண வாழ்க்கையில் அவ்வளவு எளிதாக எடுத்துவிட முடியாது. ஒருவேளை இருவருக்கு இடையே தவிர்க்க முடியாத பிரச்சனைகள் இருந்தால் சரியான மன நல ஆலோசகரை அணுகி, பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள்.
கவுன்சிலிங் ஏன் தேவை? : சின்ன சின்ன விஷயங்களுக்கு சண்டை ஏற்பட்டு, மிகப்பெரிய பின்விளைவுகளாக மாறும்போது, ஒருவரின் முடிவை ஏற்றுக்கொள்ள முடியாதபோது, சகிப்புத் தன்மையை பேண முடியாதபோது என பல்வேறு நிலைகளில் கவுன்சிலிங் எடுத்துகொள்வது நல்லது. உங்களுக்கான முடிவை நீங்கள் எடுக்க முடியவில்லை என்றாலும், ஒருவர் உங்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும்போது நிச்சயமாக கவுன்சிலிங் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கடந்த கால விஷயங்களை உங்களை உறுத்துகின்றபோது, பழைய நிகழ்வுகளை மறக்க முடியாமல் தவிக்கும்போது கவுன்சிலிங் பெற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், ரிலாக்ஷாக உரையாடும்போது பெரிய பிரச்சனையாக நினைத்துக்கொண்டிருக்கும் சில விஷயங்களை சிம்பிளாக முடிக்கும் ஐடியா அவர்களிடத்தில் இருந்து கிடைக்கும். தனக்கான ஆலோசனையை பெற்றுக்கொள்ள ஒருபோதும் வெட்கப்படக்கூடாது.




