தற்போதையை காலகட்டத்தில் கற்கும் கல்விக்கும், வாழ்க்கை முறைக்கும் துளியும் சம்பந்தம் இல்லாமல் உள்ளது. இரண்டும் வேறு வேறாகவே உள்ளன. எனவே குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று கல்வி கற்றாலும் கூட தங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும் சவால்களை சமாளிக்க தேவையான திறனை வளர்த்து விடுவது பெற்றோர்களின் அடிப்படை கடமையாக இருக்கிறது. எப்போதும் உங்கள் குழந்தைக்கான பாதையை தயார் செய்வதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாறும் வாழக்கை பாதைக்கு ஏற்ப வாழவும் குழந்தைகளை தயார் படுத்துங்கள். 10 வயதிற்குள் உங்கள் குழந்தைக்கு நீங்கள் ஏற்படுத்தி தர வேண்டிய வாழ்க்கை திறன்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
சுதந்திரம்: இன்றைய குழந்தைகளே நாளைய சமுதாயம். குழந்தைகள் என்றாலும் கூட அவர்களுக்கான உரிய சுதந்திரத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். இங்கே பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சுதந்திரமாக எதையும் கற்று கொள்ள விடாமல் எல்லாவற்றையும் தாங்களே செய்கிறார்கள். பல பெற்றோர்கள் தங்களின் ஆசை மற்றும் கனவுகளை தங்கள் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். தங்கள் குழந்தைகளின் எண்ணம் குறித்து தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. இதனால் குழந்தைகள் உடல் மற்றும் உணர்வு ரீதியான பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன. அதிக சுதந்திரம் கொடுத்து விடாமல் தேவையான அளவு சுதந்திரம் கொடுத்து, அதன் கீழ் அவர்களது வாழ்கை திறன்களை மேம்படுத்துவது அவசியம்.
உணவு தயாரித்தல் : அவசர யுகத்தில் பெற்றோர் இருவருமே வேலைகளுக்கு செல்வதால் சில நேரங்களில் குழந்தைகளுக்கு தேவையான உணவுகளை குறித்த நேரத்தில் செய்து தர இயலாமல் போகிறது. பசியுடன் அவர்கள் காத்திருக்கும் நிலை உண்டாகிறது. இந்த தருணங்களை சமாளிக்க உங்கள் குழந்தையை இளைய வகையில் இருக்கும் சில உணவுகளை தயாரிக்க பழக்கப்படுத்துங்கள். நீங்கள் கூடவே இருந்து எளிய உணவை தயாரிக்க உதவுமாறு குழந்தைகளிடம் விளையாட்டாக கேளுங்கள். இந்த முயற்சியில் அவர்கள் கீழே எதையும் கொட்டிவிட்டால் திட்டாதீர்கள். அவர்கள் கற்று கொள்ளட்டும். துவக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் கத்தியால் வாழைப்பழங்களை வெட்ட அனுமதிப்பதன் மூலம் இந்த செயலை நீங்கள் துவக்கலாம்.
இன்டர்நெட்டை கையாளுவது : கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்புகள் காரணமாக முன்பை விட அதிக நேரம் மொபைல் அல்லது லேப்டாப்பில் நேரத்தை செலவிடுகின்றனர். எனவே டிஜிட்டல் உலகத்தில் பாதுகாப்பாக செல்ல உதவும் சில முறைகளை அவர்கள் மனதில் வலுவாக பதிய வைப்பது முக்கியம். இன்டர்நெட்டை புத்திசாலித்தனமாக மற்றும் உபயோகமாக எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது பற்றி அவர்களுக்கு கற்று தரலாம்.
துணி துவைத்தல் : பள்ளி படிப்பு முடிந்து வெளியூர்களில் கல்லூரி படிப்பிற்காக செல்லும் டீனேஜ் பருவத்தினர் பலர் துணி துவைக்க கூட தெரியாமல் கஷ்டப்படுவது நமக்கு தெரிந்த ஒன்று. இவர்கள் ஒருவராக உங்கள் பிள்ளையும் மாறாமல் இருக்க, 6 வயதிற்கு பிறகு துணிகளை துவைத்து சுத்தமாக வைத்து கொள்வதை கற்று கொடுங்கள்.
செடி வளர்ப்பு : பல குழந்தைகள் செடி வளர்ப்பில் மிகுந்த ஆர்வமுடன் உள்ளனர். எனவே செடிகள் வளர்ப்பது, மற்றும் அதன் முக்கியத்துவத்தை உங்கள் குழந்தைக்குக் கற்று தரவேண்டும். செடி வளர்ப்பு என்பது குழந்தைகள் பொறுப்போடு வளர, விவசாயம் மற்றும் மரம் வளர்ப்பின் அருமை பற்றி தெரிந்து கொள்ள உதவும்.
கடிதம் : மொபைல் வந்த பின் கடிதம் எழுதும் பழக்கம் அறவே இல்லாமல் போய் விட்டது. இப்பழக்கத்தை மீண்டும் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்துவது அவர்களின் கற்பனை வளத்தை பெருக்கும் மற்றும் அவர்களின் கையெழுத்தும் அழகாகும்.
முதலுதவி : இளைஞர்கள் கூட ரத்தத்தை பார்த்தால் பயந்து மயங்கி விழும் காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உங்கள் குழந்தைகளும் இந்த பட்டியலில் சேராமல் தவிர்க்க, காயமடைந்த ஒருவருக்கு முதலுதவி அளிப்பது எப்படி என்பதை அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
பரிசுகளை பேக் செய்வது : பரிசுகளை வாங்குவதாக இருந்தாலும், கொடுப்பதாக இருந்தாலும் குழந்தைகளுக்கு குதுகலமே. உங்கள் பிள்ளைகளுக்கு பரிசுகளை கொடுப்பதற்கு மட்டும் பழக்காமல், அதனை எவ்வாறு பேக் செய்வது என்ற நுணுக்கத்தையும் கற்று கொடுக்கலாம். இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் அவர்கள் பிறருக்கு பரிசுகளை கொடுப்பார்கள்.




