கோவிட்-19 தொற்று பரவல் காரணமாக பலரும் பணியிடங்களுக்கு சென்று வேலை பார்த்து ஓர் ஆண்டிற்கும் மேல் ஆகிவிட்டது. ஐ.டி துறையில் மட்டுமே இருந்த வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் கலாச்சாரம் தற்போது ஏராளமான துறைகளில் பரவலான ஒரு பணி முறையாக மாறிவிட்டது. காலையில் கண் விழித்து எழுந்ததும் அரக்க பறக்க அலுவலகம் ஓடாமல், தாமதமாக படுக்கையில் இருந்து எழுந்த பின் முகத்தில் தண்ணீரை தெளித்து கொஞ்சம் ஃபிரஷ் அப் ஆகி விட்டு மீண்டும் படுக்கையில் இருக்கும் போர்வையின் கீழ் திரும்பி வந்து தங்கள் அன்றாட அலுவலக பணிகளை செய்கிறார்கள்.
அலுவலகத்தில் டேபிள், சேர் சகிதம் நிமிர்ந்து நேராக உட்கார்ந்து வேலைகளை செய்தது போய், பலரும் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு லேப்டாப்பை வைத்து கொண்டு சோஃபா அல்லது மெத்தையில் அமர்ந்து கொண்டோ அல்லது படுத்து கொண்டோ வேலை பார்க்கின்றனர். ஆனால் சோஃபா போன்ற படுப்பதற்கு வசதியான ஃபர்னிச்சர்கள் அல்லது மெத்தையை எப்போதும் ஒரு தற்காலிக வீட்டு அலுவலகமாக மாற்றி கொண்டு வேலை பார்ப்பது மன மற்றும் உடல் நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்த கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நாள் முழுவதும் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது பொதுவாக ஆரோக்கியத்திற்கு மோசமானது. படுக்கையில் இருந்து கொண்டே அலுவலக வேலைகளை செய்யும்போது ஏற்பட கூடிய அபாயங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்கத்தின் தரம் குறையும் : பொதுவாக நம் மனம் சில செயல்களை சில இடங்களுடன் தொடர்புபடுத்துகிறது, அவற்றை நீங்கள் கலக்கும் போது, மனமானது குழப்பமடைந்து உங்களுக்கு ஒரு சிக்கலை உருவாக்குகிறது. ஏனென்றால் படுக்கை அல்லது மெத்தை என்பது நாம் அமைதியாக உறங்க கூடிய இடமாகும். உங்கள் படுக்கையில் உட்கார்ந்து கொண்டே நீங்கள் வேலைகளை செய்வது, திரைப்படங்களை பார்ப்பது அல்லது படிப்பது உள்ளிட்ட சில செயல்களை செய்யும் போது உங்கள் மனம் படுக்கையானது தூங்கும் இடமா அல்லது வேறு வேலைகளை செய்வதற்கான இடமா என குழப்பத்தில் சிக்குகிறது. உங்களுக்கே தெரியாமல் ஆழ்மனதில் நடக்கும் இந்த இந்த குழப்பம் உங்களது இரவு தூக்கத்தின் தரத்தை குறைக்கிறது. எனவே உங்களை அலுவலக பணிகளை மெத்தையில் உட்கார்ந்து கொண்டு செய்யாமல் வேறு இடத்தில் வைத்து செய்வது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.
கழுத்து மற்றும் தோள்பட்டை வலி : படுக்கையில் இருந்து கொண்டே வேலை செய்வது சில வகையான உடல் வலிகளுக்கு காரணமாகிறது. படுக்கையில் உட்கார்ந்து கொண்டே வேலை பார்த்தாலும் கால்களை மடித்து உட்கார்ந்து கொண்டு லேப்டாப் மானிட்டரை தவறான உயரத்தில் வைத்து கீழே குனிந்து, உடல் மற்றும் முதுகை வளைத்தபடி தொடர்ச்சியாக நாள் முழுவது வேலை பார்ப்பது கழுத்து, தோள்பட்டை மற்றும் தீவிர முதுகுவலி ஏற்பட காரணமாகி விடும். தொடர்ச்சியான வலி மற்றும் தவறான பொசிஷனில் உட்கார்ந்து வேலை பார்ப்பது தசைக்கூட்டு நோய்க்கு(musculoskeletal disease) வழிவகுக்கும்.
மனநிலை மற்றும் ஆற்றலை பாதிக்கும் : சூரிய ஒளி என்பது இயற்கையான மனநிலை பூஸ்டர், மேலும் நமது ஆற்றலை அதிகரிக்க கூடியது. பெரும்பாலும் நம் படுக்கையறையை ஸ்கிரீன் அல்லது ஜன்னல் கதவுகளை மூடி நன்றாக தூங்குவதற்கு ஏற்றவாறு வைத்திருப்போம். படுக்கையில் உட்கார்ந்து கொண்டு லைட்டை போட்டு கொண்டு நீங்கள் வேலை பார்ப்பது உங்கள் ஆற்றலை மட்டுமின்றி மனநிலையையும் பாதிக்கிறது. இருட்டு அறையில் மங்கலான விளக்குகளுக்கு மத்தியில் வேலை பார்ப்பதால் கண்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே அலுவலக பணியின் போது படுக்கையறையை தவிர்த்து விட்டு, காற்றோட்டம் மற்றும் சூரிய ஒளி இருக்க கூடிய இடத்தில அமர்ந்து வேலை செய்யலாம்.
உற்பத்தி திறன் பாதிக்கும் : அலுவலக்தில் வேலை செய்யும் போது அந்த சூழல் நம்மை வேலைகளில் மட்டுமே வைத்திருக்கும். ஆனால் வீட்டில் சாதாரண உடையில், படுக்கையில் அமர்ந்து வேலை செய்யும் போது ஒரு நபரின் உற்பத்தி திறன் பதிப்பிற்குள்ளாகிறது. படுக்கையில் உட்கார்ந்து வேலை பார்ப்பது சோம்பேறித்தனத்தையும், தூக்கத்தையும் வரவழைக்கும். இதனால் வேலை செய்வதற்கான ஆர்வமும் குறைந்து, செய்ய முடிகிற வேலைகளை கூட செய்ய முடியாமல் போய் அவப்பெயரை சம்பாதிக்க நேரிடும்.
நோய்கள் தாக்கும் ஆபத்து : நாளொன்றுக்கு 6 மணி நேரத்திற்கும் மேலாகஒரே நிலையில் உட்கார்ந்திருப்பவர்கள் இதய நோய், புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோய் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். அலுவலகம் என்றால் அவ்வப்போது சரியான நேரத்தில் பிரேக் எடுத்து கொள்வோம். ஆனால் வீட்டில் பெரும்பாலும் உட்கார்ந்தபடியே வேலைகளை செய்ய நேரிடுகிறது. எனவே பல நோய்களுடன் இது தொர்புடையது.
மேற்கண்ட அபாயங்களை தவிர்க்க படுக்கையில் உட்காராமல் டேபிள், சேரில் அமர்ந்து வேலை பாருங்கள். நன்கு வெளிச்சமான அறையை இதற்காக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஸ்கிரீனை சிறிது நேரம் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள. மனிதரில் பணிபுரியும் போது உங்கள் மணிகட்டு நேராக இருப்பதை உறுதி செய்யுங்கள்.




