129 ஆண்டுகளுக்கு பின் தாக்கிய வெப்பமண்டல புயல்... மின்னல் தாக்கியதில் பற்றி எரியும் மரம் (ஷாக் வீடியோ)

மின்னல் தாக்கியதில் பற்றி எரியும் மரம்

Cyclone Nisarga | புயல் கரையை கடந்தபோது மும்பையில் கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் கடுமையாக ஆட்டம் கண்டன.

 • Share this:
  129 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் வெப்பமண்டல புயல் ஒன்று மகாராஷ்ட்ராவை தாக்கியுள்ளது. கனமழை மற்றும் சூறாவளியால் மகாராஷ்ட்ரா, குஜராத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. மகாராஷ்டிராவில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

  நடப்பாண்டில் கடந்த மாதம் 21-ஆம் தேதி வங்கக்கடலில் உருவான உம்பன் புயல் மேற்குவங்கத்தில் கரையை கடந்தபோது, 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான வெப்பமண்டல புயலான நிசர்கா, கரையை கடக்காமல் தொடர்ந்து அச்சுறுத்தி வந்தது.

  மகாராஷ்ட்ரா, குஜராத் இடையே ஜூன் 3-ஆம் தேதி இந்த வெப்பமண்டல புயல் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மும்பையில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் ராய்காட் மாவட்டம் அலிபாக்கில் பிற்பகலில் நிசர்கா வெப்பமண்டல புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

  பொதுவாக ஜூன் மாதத்தில் உருவாகும் வெப்பமண்டல புயல், கடந்த 1891-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல்முறையாக மும்பையை தாக்கியுள்ளது. தீவிர வெப்பமண்டல புயலான நிசர்கா, 6 மணி நேரத்திற்கு பின் படிப்படியாக வலு குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடந்தபோது மும்பையில் கடல் சீற்றம் காரணமாக கப்பல்கள் கடுமையாக ஆட்டம் கண்டன.

  குஜராத்தின் பாவ்நகரின் பாலிதானா பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. அப்போது குடியிருப்பு பகுதியில் தாக்கிய மின்னல் ஒன்று அங்கிருந்த தென்னை மரம் மீது விழுந்ததால் மரம் பற்றி எரிந்தது. நல்வாய்ப்பாக அந்த மின்னல் உயிர்சேதம் ஏதும் ஏற்படுத்தவில்லை. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

   

  Such a stunning picture of lightning striking in Palitana, Gujarat! Thankfully, it struck a coconut tree and no lives were lost. I hope everyone stays safe while #CycloneNisarga runs its course. #CycloneAlert #Gujarat @Indiametdept

  Photo Courtesy: Siddharth Dholakia pic.twitter.com/fDWloB3KB8


  — Dhanraj Nathwani (@DhanrajNathwani) June 2, 2020

  மகாராஷ்ட்ராவின் மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் உள்ளிட்ட பகுதிகளிலும், தெற்கு குஜராத்தின் சில பகுதிகளிலும் கனமழை பெய்தது. மும்பை உள்ளிட்ட இடங்களில் கடுமையான காற்றால் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. மரங்கள் விழுந்து ஏராளமான கார்கள் சேதமடைந்தன. ராய்காட்டில் குடியிருப்பு ஒன்றில் மேற்கூரை காற்றில் பறந்தது.

  மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் 40க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன 1 லட்சத்திற்கும் அதிகமானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மும்பையில் இரவு 7 மணி வரை அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. மும்பை வழியாக செல்லும் ரயில்கள் வேறு வழித்தடத்தில் திருப்பிவிடப்பட்டன.


  சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
  Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


  Published by:Vijay R
  First published: