கோவில்பட்டியில் பொது வெளியில் சடலங்களை எரிக்கும் அவலம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, மயான வசதி இல்லாததால் பொது வெளியில் சடலங்களை எரிக்கும் அவலம் நிலவுகிறது.

Advertisement
கோவில்பட்டி அடுத்த கயத்தாறு அருகே உள்ளது இந்திரா நகர். இங்கு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆரம்ப காலத்தில் இப்பகுதியில் உள்ள குளக்கரையில் பொதுமக்கள் சடலங்களை எரித்து வந்தனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், இடம் ஒதுக்கி, அங்கு சடலங்களை எரிக்க அனுமதி அளித்தனர்.

எனினும் மயான கட்டடம் இதுவரை கட்டப்படாததால், பொதுவெளியில் சடலங்களை எரிக்கும் நிலைக்கு கிராம மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் டிஜிட்டல் பேனரை மேற்கூரையாக பயன்படுத்தி, சடலங்களை எரிக்கும் அவலம் நிலவுகிறது. நிர்கதியாக இருக்கும் தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் முன்வரவில்லை என குற்றம்சாட்டுகின்றனர் இந்திரா நகர் பகுதிவாசிகள்.

போதிய வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்குவதாகவும், இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பெண்களுக்காக கட்டப்பட்ட சுகாதார வளாகம் இடியும் நிலையில் உள்ளதாகவும், தங்களுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் கிணறையும் பராமரிக்கவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

இந்திரா நகர் பகுதி மக்களுக்கு மயான வசதி செய்து தர நிலம் தேர்வு செய்யும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் மயானம் கட்டித்தரப்படும் என்றும் பேரூராட்சி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, தங்கள் கிராமத்தை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்பதே இந்திரா நகர் பகுதிவாசிகளின் கோரிக்கையாகும்.
Published by:Vijay R
First published:
மேலும் காண்க