காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் உயிரிழப்பு... அந்தஸ்து வெறியில், மாப்பிள்ளையை மாமனாரே அடித்துக்கொலை

தருமபுரியில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. 

  • Share this:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கும்மனூர் சாலையின் ஓரம், கடந்த 1-ம் தேதி காலையில் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாக பஞ்சப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் உயிரிழந்த இளைஞர் பஞ்சப்பள்ளி ஒட்டர்திண்ணை பகுதியைச் சேர்ந்த மாதேவன்-வசந்தா தம்பதியின் 24 வயது மகன் விஜய் என்ற விஜி என்பது தெரியவந்தது.

பிளஸ் டூ வரை படித்த அவர் பெங்களூருவில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார். பஞ்சப்பள்ளி அருகே உள்ள பிக்கன அள்ளி பகுதியைச் சேர்ந்த மாங்காய் வியாபாரியும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தவருமான முனிராஜ் என்பவரின் மகள் ராஜேஸ்வரியை காதலித்து வந்தார்.


ஒரே சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும் பொறியியல் படித்து வரும் ராஜேஸ்வரி, காய்கறி வியாபாரம் செய்யும் விஜியை காதலிப்பதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

இருவரும் 6 மாதங்களுக்கு முன்னர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையின் இறுதியில், படிப்பு முடியும் வரை காதல் கணவரை விட்டுப் பிரிந்து மூன்று மாதங்கள் தன் தாய் வீட்டில் ராஜேஸ்வரி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

மூன்று மாதங்கள் கழிந்தநிலையில், மனைவியை தன்னுடன் குடும்பம் நடத்த அனுப்புமாறு ராஜேஸ்வரியின் பெற்றோரிடம் விஜி கேட்டுள்ளார். மீண்டும் ஆறு மாதங்கள் காத்திருக்குமாறு ராஜேஸ்வரியின் பெற்றோர் விஜியிடம் தெரிவித்ததால் அவர் பெங்களூருக்கு சென்று விட்டார்.இதற்கிடையே ராஜேஸ்வரியை அவரது தாய் மாமன் வீரமணிக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு ராஜேஸ்வரியின் தாய்மாமன் சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. தனக்குத் திருமண ஏற்பாடு நடப்பதை அறிந்த ராஜேஸ்வரி, காதல் கணவர் விஜி வீட்டுக்கு சென்று விட்டார். அவரிடம் சென்று சமாதானம் பேசிய பெற்றோர், ஆடி மாதத்திற்கு பின்னர் விஜி உடன் முறைப்படி திருமணம் செய்து வைப்பதாகக் கூறி மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால், தனது அந்தஸ்திற்குப் பொருந்தாத, பிளஸ் டூ மட்டுமே படித்து விட்டு காய்கறி வியாபாரம் செய்து வந்த விஜியை தன் மகள் திருமணம் செய்ததால் கடும் ஆத்திரத்தில் இருந்தார் தந்தை முனிராஜ். தனக்கு கிடைக்க வேண்டிய ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்ததால் தாய்மாமன் வீரமணியும் ஆத்திரமடைந்தார். இருவரும் சேர்ந்து விஜியைக் கொலை செய்யத் தீர்மானித்து தங்கள் உறவினர்களுடன் ஆலோசித்து திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி, கடந்த ஜூலை 31ம் தேதி வியாபாரம் இன்றி ஊரில் இருந்த விஜியை, ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம் எனக் கூறி ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ் மாங்காப்பட்டிக்கு வரும்படி அழைத்துள்ளார்

அதை நம்பி பைக்கில் மாங்காப்பட்டிக்கு சென்ற விஜியை மாமனார் முனிராஜ், தாய்மாமன் வீரமணி உள்ளிட்ட 6 பேர் விஜியை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் முனிராஜின் சிறிய சரக்கு வாகனத்தில் விஜி சடலத்தையும் இருசக்கர வாகனத்தையும் ஏற்றி கும்மனூரில் சாலையோரம் வீசி விட்டு விபத்து நாடகமாடியுள்ளனர்.

Also read... 87 சதவீத மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டுள்ளது - தமிழக அரசு அறிவிப்பு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையிலும், உடற்கூறு செய்த நிபுணர்களின் முதல்கட்ட அறிக்கையின்படி இது விபத்து அல்ல; கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. ஏனென்றால், விபத்துக்காயம், அடித்துக்கொல்லப்பட்டதில் ஏற்பட்ட காயம் இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளதை போலீசார் கண்டறிந்தனர்.அதன் அடிப்படையில் மாமனார் முனிராஜிடம் விசாரித்த போது முதலில் மறுத்த அவர் பின்னர் ஒப்புக் கொண்டார். ராஜேஸ்வரியின் தந்தை முனிராஜ், தாய் மாமன் வீரமணி, ஓட்டுநர் மகாலிங்கம் மற்றும் உறவினர்கள் சித்துராஜ், ஆறுமுகம், சங்கர் ஆகியோரை பஞ்சப்பள்ளி காவல் துறையினர் கைது செய்தனர்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading