பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய கோரி மனு... தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்வது தொடர்பான புகாரில் தமிழக டிஜிபி 4 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தடை செய்ய கோரி மனு... தமிழக டிஜிபி பதிலளிக்க உத்தரவு
கோப்புப் படம்
  • Share this:
சாத்தான்குளத்தில் செல்போன் கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ், விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்டு காவல் துறையினர் சித்ரவதையால் உயிரிழந்த சம்பவம் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து ஐந்து காவலர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.இந்த விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பைச் சேர்ந்த இரண்டு நபர்கள் காவலர்களுடன் உடந்தையாக இருந்து தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை காவல் வேலைகளுக்கு பயன்படுத்த கூடாது எனவும் பல மாவட்டங்களில் தடை செய்யக் கோரியும் வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.


இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த அதிசயக் குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.அதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் துணை அமைப்பாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

பல காவல் நிலையங்களில் காவலர்களுக்கு உதவுவதாக செயல்பட்டு வருவதாகவும், ஊரடங்கு காலத்திலிருந்து காவல் பணிகளை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கு மீறி வெளியே வருபவர்களை பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பினர் தாக்கிய வீடியோக்கள் வெளியாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு  செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.அதன் தொடர்ச்சியாக சாத்தான் குளத்தில் ஜெயராஜ் மற்றும் பெனிக்ஸ் தாக்கப்பட்டு மரணமடைந்த விவகாரம் மூலம் வெளிவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.இந்த அமைப்பை நிரந்தரமாக தடை செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் வழக்குப்பதிவு செய்து தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் 4 வாரத்தில் பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு காவல்துறையில் சட்டபூர்வமாக செயல்படும் அமைப்பா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. காவல்துறை பணிகளுக்கு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பேராசிரியர் நந்தினி மற்றும் சட்டீஸ்கர் மாநில அரசுக்கு இடையேயான உச்ச நீதிமன்ற வழக்கின் உத்தரவை பின்பற்றப்படுகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Also read... லடாக் விவகாரத்தில் காங்கிரஸ் - பாஜக இடையே காரசார வார்த்தை மோதல்

மேலும் புகார்தாரர் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை நிரந்தரமாக தடை செய்யக் கூறுவதன் மூலம் அந்த அமைப்பினர் செய்த தவறுகளும் மற்றும் அவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பது போல் ஆகுமா என்ற கேள்வியையும் எழுப்பி பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading