சாத்தான்குளம் வழக்கு : தலைமறைவாக இருந்துவந்த காவலர் முத்துராஜ் சிக்கியது எப்படி?

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் சிக்கியது எப்படி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளம் வழக்கு : தலைமறைவாக இருந்துவந்த காவலர் முத்துராஜ் சிக்கியது எப்படி?
முத்துராஜ்
  • Share this:
சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை வழக்கில் முதன்முதலாக உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் கைது செய்யப்பட்டார்.

அதன்பிறகு தலைமறைவாக இருந்த உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முருகன், ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் அடுத்தடுத்து சிபிசிஐடி போலீசாரிடம் சிக்கினர். இந்த கைது நடவடிக்கைகளில் முக்கிய பங்காற்றியது விளாத்திகுளம் சட்டம் ஒழுங்கு டிஎஸ்பி பீர் மைதீன் மற்றும் ஆய்வாளர் பத்மநாபன் ஆகியோர் தான்.

சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கையில் எடுத்தது முதல், வழக்கில் சிக்கியவர்களை கைது செய்யும் பணியில் ஈடுபட்டது சட்டம் ஒழுங்கு போலீசார்தான். கொலை வழக்கு பதியப்பட்ட 5 பேரில், 4 பேர் சிக்கி விட்ட நிலையில், எஞ்சிய காவலர் முத்துராஜை கைது செய்ய தீவிர முயற்சி முன்னெடுக்கப்பட்டது.


விளாத்திகுளம் அருகே ஆவாரங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இரண்டு நாட்களுக்கு முன்பே நீதிமன்றத்தில் சரண் அடையப் போவதாக குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால், அவர் எங்கும் சரணடையவில்லை. இதனிடையே, போலீசாரும் தலைமறைவு எனக் கூறியதால், சிபிசிஐடி போலீசாரே ரகசிய இடத்தில் வைத்துவிட்டு, இன்னும் பிடிக்கவில்லை எனக் கூறுகிறார்களோ என பலதரப்பிலும் சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், முத்துராஜின் வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது மனைவியையும், நெருங்கிய உறவினர்கள் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரித்து வந்தனர். இந்த தகவலை அறிந்து முத்துராஜ் சரண் அடைய முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அப்போதுதான், முத்துராஜ் அப்ரூவராக மாறிவிட்டதாகவும், சிபிசிஐடி போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரித்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதை சிபிசிஐடி ஐஜி சங்கர் மறுத்தார். மேலும், பூசனூர் பகுதியில் தனியாக நின்றிருந்த முத்துராஜின் இருசக்கர வாகனத்தையும் போலீசார் கண்டு பிடித்தனர். அங்கிருந்து நீண்ட தூரம் அவர் நடந்து சென்றிருக்க முடியாது என உறுதி செய்த போலீசார், செல்போன் சிக்னல் மூலம் தேடத் தொடங்கினர்.

5 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் தேடல் படலத்தை தீவிரப்படுத்திய போலீசார், பூசனூரில் தோட்டம் ஒன்றில் பதுங்கியிருந்த காவலர் முத்துராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட முத்துராஜ், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருந்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி. சங்கர் உறுதியளித்துள்ளார்.
First published: July 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading