விடிய விடிய லத்தியால் அடி... சிசிடிவி தடயங்கள் அழிப்பு... ரத்தக்கறை...! நீதித்துறை நடுவரின் அதிர்ச்சி அறிக்கை

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்

ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடிய போலீசார் லத்தியால் தாக்கியதாக நீதித்துறை நடுவர் பாரதிதாசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

  அதில், மதுரை கிளையின் உத்தரவை பின்பற்றி நிறைவேற்றும் பொருட்டு 28.06.2020 காலை 10 மணியளவில் நீதிமன்ற ஊழியர்களுடன் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு 12.45 மணியளவில் சென்றேன். அங்கு காவல்நிலையத்தில் பொறுப்பில் இருந்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் மற்றும் எஸ்.பி. சி.பிரதாபன் ஆகிய இருவரும் ஆய்வாளர் அறையில் இருக்கின்ற நிலையில் உள்ளே நுழைந்தேன். அந்த சமயம் அவர்கள் இருவரும் எந்தவித வரவேற்பு அறிகுறியும் இல்லாமல் அலட்சிய மனப்பான்மையுடனும், பொறுப்பற்ற தன்மையுடனும் நின்று கொண்டிருந்தனர். தனது உடல்பலத்தை காட்டுவதான உடல் அசைவுகளை செய்து கொண்டு மிரட்டும் தொனியிலான பார்வைகளுடன் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் டி.குமார் இருந்தார்.

  பொதுநாட்குறிப்பேடு மற்றும் இதர பதிவேடுகளை நான் கேட்டபோதும் முறையாக சமர்பிக்க நடவடிக்கை எடுக்காமல் டி.குமார் காவலர்களை ஒருமையில் அழைத்து அதட்டும் தொனியில் கூறிக்கொண்டு அங்கேயே நின்றிருந்தார். பின்னர் அவர்கள் வெளியே இருக்க பணிக்கப்பட்டனர்.
  படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

  படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?

  நண்பகல் 1 மணியளவில் விசாரணையை துவக்கினேன். வழக்கு பொதுக்குறிப்பு, சம்பந்தப்பட்ட பதிவேடுகள் உள்ளிட்டவை தாமதமாகவே கொண்டு வரப்பட்டு ஆய்வுகள் நடந்தன. சாத்தான்குளம் காவல்நிலையத்தில் 19-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தொடர்பான அனைத்து சிசிடிவி காட்சிகளும் அழிக்கப்பட்டிருந்தன. சிசிடிவி காட்சிகள் தானாகவே தினமும் அழியும்படி செட்டிங்ஸ் மாற்றப்பட்டுள்ளது.

  சர்வரில் போதுமான வசதி இருந்தும் தினமும் பதிவுகள் தானாகவே அழியும் வகையில் மாற்றப்பட்டிருந்தது. அந்தக் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

  அனைவரும் லத்தியை ஒப்படைத்த நிலையில் காவலர் மகாராஜன் லத்தியை ஒப்படைக்க மறுத்தார். வற்புறுத்தி கேட்ட பிறகே லத்தியை ஒப்படைத்தார். தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த அச்சத்துடனேயே இருந்தார். அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுக்கப்பட்டது.

  காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர். வாக்குமூலம் அளித்த ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது. விசாரணையின் போது காவலர் மகாராஜன் விசாரனைக்கு ஒத்துழைக்கவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  Published by:Sheik Hanifah
  First published: