PASSENGERS ARE AFFECTED BY TAMILNADU PUBLIC TRANSPORT WORKERS PROTEST SRS
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக்: பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி
காத்திருக்கும் பயணிகள்
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால், இன்று காலை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உட்பட பலரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
தமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் அறிக்கை விடுத்திருந்தன. தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்காத தமிழக அரசு, பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனைத்து தொழிலாளர்களும் பணிக்கு வரவேண்டும் என்றும் பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என்றும் அரசு எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தொழிலாளர்கள் அறிவித்தபடி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்..
தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான அரசு பேருந்துகள் ஓடவில்லை. இதனால், இன்று காலை வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உட்பட பலரும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில், மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால், வெறும் 56% பேருந்துகள் மட்டுமே இன்று இயக்கப்பட்டது. இதனால், ஆவடி, பழைய மகாபலிபுரம் சாலை, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட்ட பேருந்துகளில் அதிகமான கூட்டம் காணப்பட்டது.
இந்த சூழலை சாதகமாக்கி, ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் அதிக கட்டண வசூலில் இறங்கினர். புறநகர் ரயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில், மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் செல்ல வேண்டிய வெளியூர் பயணிகள் பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதேபோல், மதுரை, திருச்சி, ஈரோடு, கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்தப்பட்டிருந்தன.
மதுரையில், அவசர தேவைகளுக்காக காத்திருந்த பயணிகள், தனியார் மினி பேருந்துகள், புறநகர் பேருந்துகள் மூலம் பயணம் செய்தனர். பேருந்து வராததால், பெரும்பாலான பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தின் பிற பகுதிகளில் மக்களின் சிரமத்தை போக்க, அதிமுக தொழிற்சங்கமான அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்கள் பேருந்துகளை இயக்கினர். சில இடங்களில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.