தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது, ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Advertisement
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் 100 இணைப்புகளை கொண்ட கொரோனா கட்டுபாட்டு மையத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் துவக்கி வைத்தார். கொரோனா குறித்த எந்ந சந்தேகங்களுக்கும் 044 46122300, 044 25384520 என்ற எண்களில் அழைத்து தகவலை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், கடந்த முறை 4 லட்சம் அழைப்புகளுக்கு பதில் அளித்துள்ளோம். இந்த முறை கொரோனோ பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. தொலைபேசியில் தேவைப்படுவோர் மட்டும் அழையுங்கள். தேவை இல்லாத அழைப்புகள் மூலம் பிராங் பண்ண வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, தமிழகத்தில் முழு ஊரடங்கு இருக்காது. ஆனால் கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். சென்னையில் உள்ள உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்படும். உள் அரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் கலந்து கொள்பவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் கொரோனா தடுப்பூசி குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் விவேக் மரணத்தை தடுப்பூசியுடன் தொடர்புப்படுத்தி பேசினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
Published by:Vijay R
First published:
மேலும் காண்க