மரங்களை நட்டு மனங்களில் வாழும் சனங்களின் கலைஞன் விவேக் - கருணாஸ் புகழாஞ்சலி

மரங்களை நட்டு மனங்களில் வாழும் சனங்களின் கலைஞன் விவேக் என நடிகர் கருணாஸ் புகழாஞ்சலி தெரிவித்துள்ளார்.

Advertisement
நகைச்சுவை நடிகர் விவேக்கிற்கு நேற்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மோசமானதால் எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. விவேக்கின் உடலுக்கு திரைபிரபலங்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவருமான கருணாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், சின்னக்கலைவாணர், சனங்களின் கலைஞன், என அனைவராலும் அழைக்கப்படும் என் இனிய அண்ணன் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. நகைச்சுவைக் கலைஞர், சமூக உணர்வாளர், என பன்முகம் கொண்ட கலைஞர் விவேக். தாம் நடித்த படங்கள் அனைத்திலும் சமூகக்கருத்துகளை பரப்பியவர். கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களுக்குப் பிறகு சமூகச்சீர்திருத்த சிந்தனைகளை சினிமாவில் விதைத்தவர் நண்பர் விவேக்.

மரம் நடுதல், பிளாஸ்டிக், கோரோனா போன்றவற்றிருக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தல், ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவுதல், சகக்கலைஞர்களை ஊக்குப்படுத்துதல் அவருக்கு ஆதராவக இருந்தல், தமிழ்ச்சமூகத்திற்கு எதிராக ஏதாவது ஒரு தீங்கு நடந்தால் உடனடியாக அதற்கு தமது கருத்தை வெளியிடுதல் என ஒரு சமூகப்பற்றுள்ள கலைஞனாக வாழ்ந்தவர் விவேக் அவர்கள். விவேக் சிறந்த நடிகன் மட்டுமல்ல மிகச்சிறந்த மனிதன் என்பதற்கு அவருடைய செயல்பாடுகள் நமக்கு உணர்த்துகின்றன.

கனவுநாயகன் கலாம் அவர்களின் மரம் நடும் கனவை நனவாக்கிக் கோடிக்கணக்கான மரங்களை நட்டும், மனித மனங்களில் வாழும் மாபெரும் கலைஞன் விவேக் அவர்களின் மறைவு, திரையுலகத்தினருக்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்திற்கே ஒரு பேரிழப்பாகும்.

அண்ணன் விவேக் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published:
மேலும் காண்க