”ஜெயலலிதா மெய்சிலிர்க்க வைக்கும் ஃபேஷன் ஆளுமை” - தலைவி பட காஸ்டியூம் டிசைனர் நேர்காணல்

ஜெயலலிதா ஒரு முழுமையான் ஃபேஷன் திவா. அவர் அந்த சமயத்தில் ஒரு ஃபேஷன் ஆளுமையாக வலம் வந்திருக்கிறார். அந்த சமயத்தில் அனைத்து ஃபேஷன் ஸ்டீரியோ டைப்புகளையும் உடைத்துள்ளார்.

Advertisement
பாலிவுட் நடிகை கங்கனா ரனாத் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம்தான் தலைவி. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் இந்த படம் ஏ.எல் விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கிறது. இதன் டிரெய்லர் அண்மையில் வெளியானதையடுத்து மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது இந்த படம். மிரட்டல் வசனங்களும், கம்பீர தோற்றமும் கங்கனாவின் நடிப்பை தமிழ் மக்களிடம் பதிய வைக்கிறது என்றே சொல்லலாம்.

பொதுவாக வாழ்க்கை வரலாறை தழுவி எடுக்கும் படம் என்றாலே கூடுதல் உழைப்பு அவசியம். ஏனெனில் எந்த இடத்திலும் அதன் உண்மை மாறாமல் அப்படியே எடுக்க வேண்டும். அதில் எந்த திணிப்பும் இருக்கக் கூடாது. அதிலும் குறிப்பாக இந்த தலைவி படம் நிச்சயம் கூடுதல் மெனக்கெடலைக் கொண்டிருக்கும். ஜெயலலிதா என்னும் ஆளுமையை அவ்வளவு எளிதாக சொல்லிவிட்டுப் போக முடியாது. அவரின் ஆளுமை அனைவரும் அறிந்ததே என்றாலும் அவருடைய இன்னொரு பெண்மை முகத்தை அவருடைய திரை நாட்களில்தான் காண முடியும். அதில் அவருடைய ஃபேஷன் சென்ஸ் என்பது இன்றைய நவீன நடிகைகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தக் கூடியது. அதிலும் அவர்தான் முன்னோடியாக இருந்திருக்கிறார். அதை 300 படங்களுக்கு மேல் காஸ்டியூம் டிசைன் செய்யும் நீடா லுல்லாவே ஒப்புக்கொள்கிறார் என்றால் மிகையல்ல.ஆம்...இவர் தலைவி படத்தில் ஜெயலலிதாவை கங்கனா மூலம் ரீக்கிரியேட் செய்த கலைஞர். திரையில் ஒரு சில இடங்களில் ஜெயலலிதாவை பார்ப்பது போன்று இருக்கிறதே என தோன்றியிருந்தால் அதில் இவரின் ஆடை அலங்காரத்திற்கும் பங்கு உண்டு. அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு பிரத்தியேகமான அளித்த நேர்காணலிலிருந்து சில உங்களுக்காக....

நீட்டா லுல்லாவிற்கு இந்த படத்தில் வேலை செய்வது அத்தனை எளிதாக இருக்கவில்லை. அவருடைய சவாலான படங்களின் பட்டியலில் இது மிக முக்கிய இடத்தைக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவருடைய அனுபவத்தை பகிர்ந்த போது “ நான் ஜெயலலிதா அம்மாவின் முந்தைய வருடங்களுக்கு சென்று மிக ஆழமான சில ஆய்வுகளை மேற்கொண்டேன். அவருடைய படங்கள், பாடல்களில் எவ்வாறெல்லாம் காஸ்டியூம் டிசைனில் கவனம் செலுத்தியிருக்கிறார் என்பதையும், அவர் திரை அல்லாத தனிப்பட்ட வாழ்க்கையில் எப்படியெல்லாம் காஸ்டியூம் அணிவார் என்பதையும் ஆய்வு செய்தேன். அதையொட்டி நிறைய புகைப்படங்களை சேகரித்தேன், நூலகங்கள் சென்றேன், இணையத்தில் மூழ்கி ஒரு நீச்சலே அடித்தேன். குறிப்பாக அவருடைய பாடல்களை ஒரே சமயத்தில் 15-16 முறை மீண்டும் மீண்டும் போட்டு பார்த்தேன்” எனக் கூறியுள்ளார்.அந்த ஆய்வுகளை மேற்கொண்ட போது உங்கள் மனதிற்குள் தோன்றியது என்ன..? என்ன நினைத்தீர்கள்..? ”அவர் அணிந்திருந்த ஆடை அலங்காரங்கள் ஒவ்வொன்றும் பேசும். குறிப்பாக அவருடைய புடவை தோற்றம், அணிந்திருக்கும் விதம் ஆளுமையின் உச்சம் எனலாம். அதேபோல் லிங்கரீஸ், பிரா போன்ற கவர்ச்சியான ஆடைகளில் கூட அழகு நிறைந்திருக்கும். ஆனால் அவருடைய அரசியல் வாழ்க்கை என்று வரும் போது அதற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கும். அவரின் தோற்றத்திற்காக கங்கனா 20 கிலோ வரை எடையைக் கூட்டினார்”.

உங்கள் உடலமைப்பிற்கு ஏற்ற குர்தியை எப்படி தேர்வு செய்வது.? ஸ்டைலிங் டிப்ஸ்..!

அதேபோல் இயக்குநர் விஜயுடன் வேலை செய்தது மிகவும் திருப்தி அளித்ததாகக் கூறியுள்ளார். அவர் கொடுத்த முழு சுதந்திரமும் என் மீது கொண்ட நம்பிக்கையே அதற்குக் காரணம் என்று கூறியுள்ளார். ”ஜெயலலிதாவின் ஆடை அலங்காரத்தை அந்த காலத்திற்கே சென்று அவற்றை ரிக்கிரியேட் செய்ய வேண்டி இருந்தது. மிகவும் குறைந்த அளவே எங்களுடைய சில டச்சை கொடுத்தோம். ஆனால் படம் முழுவதும் அவருடைய தோற்றத்தைதான் அப்படியே செதுக்கியுள்ளோம். ஒவ்வொரு முறையும் அவருடைய புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து பார்த்துதான் மேக்அப் , அலங்காரங்களை செய்தோம்” என்று கூறியுள்ளார்.இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 70- 90 ஆடைகளை வடிவத்திருக்கிறாராம். இதற்கான ஆய்வுகள் ஒவ்வொரு நாளும் செய்வாராம். சில நாட்கள் திடீரென ஒரு வீடியோவைப் பார்த்து அதிலிருந்து உடனே ஒரு ஸ்டைல் மற்றும் ஆடையை வடிவமைப்பாராம். ஒரு வீடியோ காட்சியை 15 முறை பார்க்கும்போதும் ஒவ்வொரு முறையும் புது ஐடியாக்கள் உதிர்க்குமாம். எனவே ஒவ்வொரு முறையும் செதுக்கி செதுக்கிதான் கங்கனாவிற்கு ஜெயலலிதாவின் தோற்றத்தை வடித்துள்ளனர். அவர் அணியும் ஷூ முதல் எம்பராய்டரி நகைகள் வரை நுட்பமாக வேலை செய்துள்ளனர். எனவே இது அவருக்கு மிகவும் சவாலான படம் என்று கூறியுள்ளார்.

கங்கனாவும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்ததாகக் கூறியுள்ளார். இறுதியாக ஜெயலலிதாவை ரிக்ரியேட் செய்தபோது அவருடைய ஃபேஷன் குறித்த பார்வை உங்களுக்கு எப்படி இருந்தது என்ற கேள்விக்கு “ நான் ஆய்வு செய்த போதே அவருடைய பேஷன் சென்ஸை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அவர் தனக்கென ஒரு பாணியையும், ஸ்டைல் ஸ்டேட்மெண்டையும் உருவாக்கியுள்ளார்.அவர் ஒரு முழுமையான் ஃபேஷன் திவா. அவர் அந்த சமயத்தில் ஒரு ஃபேஷன் ஆளுமையாக வலம் வந்திருக்கிறார். அவர் ஸ்டேட்மெண்டை மட்டும் உருவாக்கவில்லை. அவற்றை சௌகரியமாகவும் கையாண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் அந்த சமயத்தில் அனைத்து ஃபேஷன் ஸ்டீரியோ டைப்புகளையும் உடைத்துள்ளார். அவர் காஞ்சிபுரம் பட்டுப்புடவை அணிந்தால் கொண்டை வைத்து அதை சுற்றி மல்லிக்கைப்பூ சூடி  அதை கையாளும் விதம் மெய் சிலிர்க்க வைக்கும் என சிலாகித்துக் கூறியுள்ளார் நீடா லுல்லா.
Published by:Sivaranjani E
First published:
மேலும் காண்க