மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுப்பு; மனுவாத பாஜக அரசே இதற்கு முழு பொறுப்பு - திருமாவளவன்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியதற்கு, மத்தியில் ஆளும் மனுவாத பாஜக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரமே காரணம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு மறுப்பு; மனுவாத பாஜக அரசே இதற்கு முழு பொறுப்பு - திருமாவளவன்
விசிக தலைவர் - திருமாவளவன்
  • Share this:
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவருமான தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, ”மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு இட ஒதுக்கீடு வழங்க உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கைவிரித்துள்ளது. மத்தியில் ஆளும் பெரும்பான்மை இந்துவிரோத- மனுவாத பாஜக அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணபத்திரமே இதற்குக் காரணம்.

இந்துக்களுக்கான ஒரே பாதுகாப்பு அரண் தாம் மட்டுமே என காட்டிக்கொள்ளும் பாஜக அரசு, இவ்விவகாரத்தில் தனக்குத்தானே முகத்திரையைக் கிழித்துக்கொண்டு அம்பலப்பட்டு நிற்கிறது. உழைக்கும் பெரும்பான்மை இந்துக்களான பிற்படுத்தப்பட்டோருக்கு- மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீட்டு உரிமையை மறுக்கும் பாஜக அரசை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்.

இது தொடர்பாக தமிழ்நாட்டின் ஒருமித்த கருத்தை மத்திய அரசுக்குத் தெரிவிக்கவும் எடுக்கப்படவேண்டிய சட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் எனத் தமிழக முதலமைச்சரை வலியுறுத்துகிறோம்.


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டே 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீடும் கூட வழங்க உத்தரவிட முடியாது என்று தெரிவித்திருக்கிறது. இதற்குக் காரணம் இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரமே ஆகும்.

இது தொடர்பான கொள்கை முடிவை எடுக்கும்வரை நாங்கள் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கூட கொடுக்க முடியாது என்று மத்திய அரசு அதில் தெரிவித்திருந்தது. அதனை ஏற்றுத்தான் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இதனால் இப்போது மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு இந்த ஆண்டு மட்டுமல்ல மத்திய அரசின் கொள்கை முடிவு எடுக்கும் வரை வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. ஓபிசி எனப்படும் அனைத்துப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் எதிராக அப்பட்டமான மனுவாத நிலைபாட்டை பாஜக அரசு எடுத்திருக்கிறது. இதுவே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அடிப்படை காரணம்.

Also read: திருமாவளவன் மீது பொய் புகார் கொடுத்தவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - நாராயணசாமி கருத்துஏற்கனவே, நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டபோது சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்கள் இதைத்தான் தெரிவித்தார். அதன்பிறகு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டன. உயர்நீதிமன்றத்துக்குப் போகுமாறு உச்சநீதிமன்றம் சொன்னதால், பின்னர் இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இதில் தெளிவாகத் தீர்ப்பை வழங்கியது. 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்று சொன்னதோடு இதற்காக மூன்று மாதங்களுக்குள் மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் ஆணையிட்டது.

ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு என்பது சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கிற உரிமையாகும். அந்த உரிமையை மறுத்து மனுஸ்மிரிதி அடிப்படையில் ஆட்சியை நடத்துவதால்தான், பிற்படுத்தப்பட்டோர் மருத்துவக் கல்வி பெறுவதை அனுமதிக்க மறுக்கிறது. இதனை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். பாஜக என்பது ஓபிசி எஸ்சி எஸ்டி உள்ளிட்ட பெரும்பான்மை இந்துமக்களின் எதிரி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இட ஒதுக்கீடு உரிமையை காக்கவும் பாஜக அரசின் மனுவாத சதித் திட்டத்தை முறியடிக்கவும் தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்தியாவிலேயே இட ஒதுக்கீட்டுக்கு வழிகாட்டும் மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாடு, இப்போதும் தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முன்வரவேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையில் தமிழ்நாட்டின் ஒருமித்த நிலைபாட்டை மத்திய அரசுக்கு உணர்த்தவும், சட்டரீதியாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகளைத் திட்டமிடவும் உடனடியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
First published: October 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading