தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்தநிலையில் கோயில், தேவாலயம், மசூதிகளில் பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மத தலைவர்களோடு தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ள மதத் தலைவர்களிடம், தடை செய்யப்பட்ட பகுதியில் இருந்து வரும் பக்தர்களை வழிபாட்டு தலங்களுக்குள் அனுமதிக்க கூடாது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டோர், 10 வயதுக்கு உட்பட்டோர் வழிபாட்டுத் தலங்களுக்கு வருவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும், நுழைவுவாயிலில் கிருமி நாசினி வழங்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும், பக்தர்கள் கை, கால்களை சுத்தம் செய்த பிறகு உள்ளே நுழைவதை உறுதி செய்ய வேண்டும்.
நோய் அறிகுறி இல்லாத பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும், வழிபாட்டு தலங்களில் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டும்,
பக்தர்கள் வரிசையில் நிற்கும் வகையில் வட்டமிட வேண்டும். உள்ளே வருவதற்கும் வெளியே செல்வதற்கும் தனித்தனி வாயில்களை பயன்படுத்த வேண்டும்
சாமி சிலைகளை தொட பக்தர்களுக்கு அனுமதிக்க கூடாது பஜனை குழு, பக்தி இசைக்குழுக்களை அனுமதிக்க கூடாது.
வழிபாட்டு தலங்களின் தரைப்பகுதியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படும் என கூறப்படுகிறது.