பட்டப்பகல்.. நெடுஞ்சாலை.. கூலிப்படை.. ஓடஓட விரட்டி கணவன் படுகொலை..! மனைவி சிக்கியது எப்படி?

Youtube Video

தஞ்சையில் பட்டப்பகலில் நெடுஞ்சாலையில் ஓட ஓட விரட்டி யூசுப் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரது மனைவியே கூலிப்படையை ஏவி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. கணவரை கொடூரமாக கொலை செய்தது ஏன்?

 • Share this:
  தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரை சேர்ந்தவர் 45 வயதான யூசுப். தாய், தந்தையை இழந்த இவர் குவைத் நாட்டில் ஷாப்பிங் காம்பளக்ஸ் ஒன்றில் சூப்பரவைசராக பணியாற்றி வந்தார்.

  அங்கு தன்னைப்போலவே தாய், தந்தையை இழந்து தனியாக வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 40 வயதான அசிலா என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

  கை நிறைய சம்பாதித்த இருவரும் குவைத்தில் இருந்து தஞ்சை வந்து, அப்பார்ட்மெண்ட் வீடுகள், விவசாய பண்ணை என சொத்துக்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

  கடந்த 25 ஆம் தேதி வல்லம் அருகே நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த யூசுப்பை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்தது.
  படிக்க: டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்குத் தடை - என்னென்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?

  படிக்க: இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு - மனிதர்கள் மீது சோதனை
  இது குறித்து வல்லம் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மேலும் இக்கொலை தொடர்பாக 25ஆம் தேதி இரவு, யூசுப்பின் மனைவி அசிலாவை பிடித்து விசாரித்தனர்.

  விசாரணையில், தஞ்சையைச் சேர்ந்த ஒரு கும்பலிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கணவரை கொலை செய்யச் சொன்னதாக கூறி உள்ளார்.

  அவர்களை பிடித்து விசாரித்தபோது, பணம் வாங்கியது உண்மைதான் ஆனால் யூசுப்பை தாங்கள் கொலை செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.

  இதை அடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்தது தெரிந்தது.

  அவர்கள் திருச்சியில் உள்ள ஒரு கூலிப்படையைச் சேர்ந்த 26 வயதான சகாதேவன், அவரது நண்பர் 25 வயதான பிரகாஷ் உள்ளிட்டவர்கள் என தெரியவந்தது.

  இதை அடுத்து சகாதேவன், பிரகாசை பிடித்து விசாரித்தபோது, தாங்கள்தான் கொலை செய்ததாகவும், யூசுப்பின் மனைவி அசிலா 15 லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்யச் சொன்னதாகவும் கூறியுள்ளனர்.

  இதை அடுத்து அசிலாவிடம் மீண்டும் போலீசார் விசாரித்த்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. குவைத்திலிருந்து தஞ்சை திரும்பிய இருவரும், அங்கு சம்பாதித்த பணத்தில் நிறைய சொத்துக்கள் வாங்கி உள்ளனர்.

  அசிலா இலங்கையைச் சேர்ந்தவர் என்பதால் அனைத்து சொத்துக்களையும் யூசுப் பெயரிலேயே வாங்கியுள்ளனர். இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகனும், 11 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

  மனைவி குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த யூசுப் சிறிது காலம் கழித்து மீண்டும் குவைத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார்.

  தஞ்சையிலேயே அசிலா குழந்தைகளுடன் வசித்து வந்த போது, அப்போது அசிலாவிற்கு வேறு சில ஆண்களுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இதை கேள்விப்பட்ட யூசுப், தஞ்சை திரும்பி சொத்து பத்திரம், பணம், நகை ஆகியவற்றை எடுத்து, தனது பெயரில் தனியார் வங்கி லாக்கரில் வைத்து விட்டு குவைத் சென்றுள்ளார்.

  இதனால் ஆத்திரமடைந்த அசிலா, தனியார் வங்கி மேலாளரை தனது வலையில் வீழ்த்தி, யூசுப் அனுமதி இல்லாமல் லாக்கரில் உள்ள பணம், நகையை எடுத்து செலவு செய்துள்ளார்.

  இதனை அறிந்த யூசுப் குவைத்தில் இருந்து தஞ்சை திரும்பி வங்கி மேலாளர், மனைவி அசிலா ஆகிய இருவர் மீதும், தஞ்சாவூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

  இதில் அசிலா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் வெளியே வந்துள்ளார். அதன்பிறகு, அசிலா குழந்தைகளுடன் திருச்சி சென்று அங்கு வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.

  அசிலா வீட்டை விட்டு சென்ற நிலையில், யூசுப் சொத்துக்களை விற்று பல பெண்களுடன் உல்லாச வாழ்க்கை வாழ ஆரம்பித்துள்ளார்.

  இதனால் கோபம் அடைந்த அசிலா, யூசுப்பை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். யூசுப் இறந்தால் சொத்துக்கள் அனைத்தும் தனக்கு வந்துவிடும் என சிலர் வழங்கிய ஆலோசனை பேரில் சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

  அதற்காக தஞ்சயைில் ஒருவரிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்து கொலை செய்யச் சொல்லியுள்ளார். ஆனால் அவர்கள் யூசுப்பை கொல்லவில்லை.

  இதை அடுத்து தனது முயற்சியை கைவிடாத அசிலா, திருச்சியில் உள்ள ஒரு கூலிப்படை கும்பலை அணுகி, 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறி யூசுப்பை கொலை செய்யக் கூறியுள்ளார்.

  அந்த கும்பல்தான் கடந்த 25ஆம் தேதி வல்லம் அருகே நெடுஞ்சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்த யூசுப்பை ஓட ஓட விரட்டி கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் அசிலா ஒத்துக் கொண்டார்.

  அசிலா, கூலிப்படையைச் சேர்ந்த சகாதேவன், பிரகாஷ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், கொலையில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


  மேலும் படிக்க...
  பெற்றோரை இழந்த யூசுப்பும், அசிலாவும் வேறு சொந்தங்களின் ஆதரவு இல்லாமல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த நிலையில், அவர்களின் இரண்டு குழந்தைகளும் தற்போது ஆதரவு இல்லாமல் நிர்க்கதியாய் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
  Published by:Vaijayanthi S
  First published: