சென்னையில் கந்துவட்டி கொடுமையால் ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

கந்துவட்டிக் கொடுமையால், ஏசி மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலைக்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என செல்போனில் ஆடியோவும் பதிவு செய்துள்ளார்.

Advertisement
சென்னை ஓட்டேரி தேவராஜ் தெருவைவச் சேர்ந்தவர் 47 வயதான லோகநாதன். ஏசி மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில் குழந்தைகள் இல்லை. வியாழக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் வீட்டிற்கு வந்தவர், மனைவி இல்லாத நிலையில் மின்விசிறியில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கொசப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவரிடம் 7 ஆண்டுகளுக்கு முன்பு 40000 ரூபாயை கடனாக வாங்கியுள்ளார் லோகநாதன்.

மாதம் 10 பைசா வட்டி வீதம் 7 ஆண்டுகளாக செலுத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக வட்டி செலுத்தாத நிலையில் செல்வம், லோகநாதன் வீட்டிற்கு சென்று அவரையும் அவரது மனைவியையும் தகாத வார்த்தைகளால் திட்டியதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்துதான் லோகநாதன் தனது தற்கொலை முடிவை மேற்கொண்டார் என்கின்றனர் போலீசார்.

மேலும் படிக்க...  மேற்குவங்கத்தில் 5ம் கட்டத் தேர்தல் நிறைவு

தற்கொலைக்கு முன்பு தனது செல்போனில் லோகநாதன் ஒரு ஆடியோ பதிவு செய்துள்ளார். தனது இறுதி வாக்குமூலமாக அதை போலீசார் எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ள அவர், தனது சாவுக்கு காரணமான செல்வம், அவரது தம்பி, இவர்களின் தாய் மாரியம்மாள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கந்துவட்டிக் கொடுமையால், ஏசி மெக்கானிக் ஒருவர், ஆடியோ பதிவிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
மேலும் காண்க