வேலூரில் இருந்து திருச்சி நோக்கி நேற்று காலை 10 மணியளவில் அரசுபேருந்து ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. பேருந்தில் வேலூர் அருகேயுள்ள வேலப்பாடியை சேர்ந்த ஏழுமலை நடத்துநராகவும், ராணிப்பேட்டையை சேர்ந்த வாசுதேவன் ஓட்டுநராகவும் இருந்தனர். பேருந்தில் குறைவான பயணிகளே இருந்த நிலையில் மாலை 4 மணியளவில்
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச் சாவடி பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிக்கெட் பரிசோதகர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர்.
அப்பொழுது பயணிகளிடம் டிக்கெட் பரிசோதனை செய்துவிட்டு, சீட்டுக்கு அடியில் இரண்டு பெரிய பேக்குகள் இருப்பதை கண்டனர். மேலும் இதற்கு ஏன் டிக்கெட் வாங்கவில்லை என்றும், பேக்கில் என்ன உள்ளது என்றும் அதனை எடுத்து வந்த 2 வாலிபர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது அந்த பேக்குகளை பற்றி அந்த 2 வாலிபர்களும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
இதனையடுத்து சந்தேகம் அடைந்த நடத்துனரும் டிக்கெட் பரிசோதகர்களும் பேக்குகளை திறந்து காட்டச் சொல்லி பார்த்தபோது அதன் உள்ளே
கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவர்களை கஞ்சா பேக்குகளுடன் அழைத்து வந்து மங்களமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன் பிறகு அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 30 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த மங்களமேடு போலீசார், தொடர்ந்து இரண்டு வாலிபர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் தேனி மாவட்டம் கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியை சேர்ந்த அறிவுச்செல்வம் மகன் செல்வம் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் மகன் முஜீப் என்பது தெரியவந்தது.
மேலும் படிக்க...
இரவு நேர ஊரடங்கால் நெடுந்தூர பேருந்துகளுக்கான பயண நேரம் மாற்றியமைப்பு... தென் மாவட்டங்களில் இருந்து காலை நேரங்களில் மட்டும் சென்னைக்கு பேருந்துகள் இயக்கம்...
மேலும் இவர்கள் இருவரும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து
தென் மாவட்டங்களில் விற்பனை செய்பவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைடுத்து. அவர்களை கைது செய்த போலிசார் தொடர்ந்து அவர்கள் யாரிடம் கஞ்சா வாங்கினார்கள், இந்த கஞ்சா கடத்தல் விவகாரத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது, எங்கு எடுத்து செல்கிறார்கள் என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பெரம்பலூர் அருதே ஓடும் பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: ஆர் ராஜவேல், பெரம்பலூர்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்