தி ஃபேமலி மேன் 2 இந்தித் தொடரை தடை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அமேசான் ஓடிடி தளத்தில் வெளிவந்த தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற தொடராகும். மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான இந்த வெப் சிரீஸ் ஒரு உளவாளியின் வாழ்க்கையை கருவாக கொண்டதாகும்.
முதல் பாகம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. ஜூன் 4ம் தேதி இந்த தொடர் தங்களது ஒ.டி.டி. தளத்தில் வெளியாகும் என அமேசான் அறிவித்துள்ளது. மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் சமந்தாவும் நடித்துள்ள இந்த தொடரில் தமிழர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக
சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து தி ஃபேமலி மேன் வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினரும் மதிமுக பொதுச்செயலாளருமான வைகோ
மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், இந்தி மொழியில் வெளியாகும் தி ஃபேமலி மேன் 2 தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது.தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர்.
ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன. இத்தகையக்காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது; தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. எனவே இந்தத் தொடரை எதிர்த்து தமிழ்நாட்டில்
கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.
அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். தி ஃபேமலி மேன் 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்