தீய சக்தியையும் துரோக சக்தியையும் அழிக்கின்ற மாற்று சக்தியாக அம்மா சக்தியாக தர்ம சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்குகிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் இன்று கும்பகோணம் தொகுதி வேட்பாளர் பாலமுருகன் திருவிடைமருதூர் தொகுதி வேட்பாளர் குடந்தை அரசன் ஆகியோரை ஆதரித்து உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில்,
புரட்சித் தலைவரால் தீய சக்தி என அழைக்கப்பட்ட திமுக கடந்த 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லை. ஆட்சிக்கு வந்தால் வாய்ப்புக் கிடைத்தது என்று காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் புகுந்தது போல் பொதுமக்களின் செல்வங்களை சூறையாடிவிடுவார்கள்.
அதிமுக, திமுக இரு கட்சிகளும் வீட்டுப் பெண்களுக்கு ரூ.1000 மற்றும் ரூ.1500 என ஏலம் போட்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அமமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளை பாதிக்கக்கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை அனுமதிக்க மாட்டோம். தனியார் சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைகள் பெற்றுத் தரப்படும். விவசாயிகள் அறுவடை செய்த நெல் விவசாய நிலங்களுக்கு நேரடியாக வந்து கொள்முதல் செய்யப்படும்.
நெல் மூட்டை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3000 வழங்கப்படும் எனவும்கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிகளை ஒன்றிணைத்து கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்படும் என்றார்.
மேலும் தீய சக்தியையும்(திமுக) துரோக சக்தியையும் (அதிமுக) அழிக்கின்ற மாற்று சக்தியாக அம்மா சக்தியாக தர்ம சக்தியாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விளங்குகிறது. நடுநிலையான உண்மையான ஜனநாயக ஆட்சி அமைந்திட மக்கள் அமமுக கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மயிலாடுதுறை, நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் செய்தார்.