முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் முன்னாள் தென்மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, கருணாநிதி மறைவுக்குப் பின்னர், திமுகவில் இணைய விரும்பினார். இது தொடர்பாக, மு.க.அழகிரி தரப்பு விடுத்த கோரிக்கைகளுக்கு மு.க.ஸ்டாலின் தரப்பு செவிசாய்க்கவில்லை. அத்தனை முயற்சிகளும் பலனளிக்காமல் போனதால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த மு.க.அழகிரி, அவ்வபோது தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதனால், அவர் தனிக்கட்சித் தொடங்கப் போவதாகவும், ரஜினியுடன் சேரப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும், அமித் ஷாவை சந்தித்து பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், மதுரை வில்லாபுரத்தில் திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கோபியின் சகோதரர் நல்ல மருதுவின் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய மு.க.அழகிரி, பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அழகிரியின் அரசியல் நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், பாஜக வில் சேரப் போவதாக வந்த தகவல் வதந்தி என்றும், புதிய கட்சி துவங்குவது குறித்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விரைவில் தனது முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகளின் கருத்து:
ஸ்டாலினுக்கு எதிரான நிலைப்பாட்டையே மு.க.அழகிரி எடுப்பார் என அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் ஒப்பிடும்போது, அரசியல் சாமர்த்தியம் மிக்கவர் அழகிரி எனக் கூறியுள்ள பாஜக தமிழக பொதுச் செயலாளர் சீனிவாசன், அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
ஆனால், இப்போது மு.க.அழகிரிக்கு ஆதரவாளர்கள் குறைந்துவிட்டதை சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம், இக்கட்டான சூழ்நிலையிலேயே, அழகிரி இவ்வாறு கூறுவதாக தெரிவிக்கிறார். தேர்தல் நெருங்கும்போது இதுபோன்ற நெருக்கடிகள் வருவது இயல்புதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.