புதுச்சேரியில் வெளிநாட்டவர்கள் கடல் அலை சறுக்கு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக புதுச்சேரி மற்றும் புதுச்சேரியையொட்டி உள்ள தமிழக கடற்கரை பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு தளர்வில் கடற்கரை சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. கடற்கரைகளுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் வெளிநாட்டவரும் வந்து தங்குவதற்கான விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி வந்துள்ள வெளிநாட்டவர் மற்றும் ஆரோவில்லில் தங்கியுள்ள வெளிநாட்டவரும் கடல் அலை சறுக்கு பயிற்சியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கடல் அலை சறுக்கு பயிற்சிக்கு ஏற்ற வகையில் கடல் அமைந்திருக்கும். இதனால் ஏராளமான வெளிநாட்டவர் புதுச்சேரியில் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2 மாதங்களாக கடற்கரை மூடப்பட்டதால் பயிற்சி நிறுத்தப்பட்டிருந்தது.
ஊரடங்கு தளர்வு காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு வர துவங்கியுள்ளனர். இதில் கடல் அலை சரக்கு பயிற்சிக்காக வரும் பயணிகள் கடற்கரை பகுதிகளில் பயிற்சி பெற்று வருகிறார்கள். புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியான கோட்டக்குப்பம், தந்திராயன்குப்பம்,ஆரோவில் கடற்கரையில் அவர்கள் பயிற்சி பெறுவதற்கு ஏற்ற வகையில் கடற்கரை அமைந்துள்ளது.மேலும் கடல் அலை பயிற்சிக்கு ஏற்ப அலைகளும் இருப்தால் அவர்கள் ஆர்வத்துடன் பயிற்சி பெறுகிறார்கள்.