துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான உயர்நிலை கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் பல்வேறு பரிந்துரைகளை ஆளுநரிடம் அளித்தார். அதன்படி, கொரோனா பரிசோதனை, கண்டறிதல் மற்றும் தடுப்பூசி போடுவதை அதிகரிக்க புதுச்சேரி சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. மேலும், கொரோனாத் தொற்று அதிகமாக உள்ளதாக அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், புதுச்சேரியில் பள்ளிகளை தற்காலிகமாக மூடவும் துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் பங்கேற்பவர்கள், மற்றும் வாக்காளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அந்தக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது குரிப்பிடத்தக்கது.