கொரோனாவில் சிக்கித்தவிக்கும் மதுரை; மக்கள் உயிர்காக்க ஆக்சிஜன் பேருந்துகள் அறிமுகம்!

ஆக்சிஜன் பேருந்து

பேருந்துகளுக்கு உள்ளே இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு, மொத்தம் 14 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இருக்கைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

  • Share this:
ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதை தவிர்க்கும் நோக்கில் இரண்டு தனியார் பேருந்துகள், ஆக்சிஜன் பேருந்துகளாக மாற்றப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தினமும் ஆயிரத்தை கடந்தும், இறப்பு விகிதம் 1.50 சதவிகிதத்தை நெருங்கியும் சென்று கொண்டிருக்கிறது. தமிழகத்திலேயே அதிக ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள 1176 படுக்கைகளும் கடந்த சில வாரங்களாகவே நிரம்பி வழிகின்றன.

மேலும், கடந்த சில நாட்களாக அவ்வப்போது ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு நோயாளிகள் சுவாச பிரச்சனைக்கு ஆளாகி, உயிரிழக்கும் சோகமும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. மே 17 மதியம் கூட ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு சில நோயாளிகள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அந்நிலையில், மதுரையை சேர்ந்த தனியார் ஆட்டோமொபைல் நிறுவனமான ஜெயராஜ் குரூப்ஸ் சார்பாக இரண்டு ஆக்சிஜன் பேருந்துகள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.

பேருந்துகளுக்கு உள்ளே இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டு, மொத்தம் 14 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் இருக்கைகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.

இந்த செறிவூட்டும் கருவிகள் காற்றில் இருந்தே ஆக்சிஜன் உற்பத்தி செய்து நோயாளிகளுக்கு வழங்கும். இந்த வசதியின் மூலம், சுவாசப் பிரச்சனை உள்ள கொரோனா நோயாளிகள் படுக்கை கிடைக்காமல் அவதியுறுவதை தவிர்த்து, பேருந்துகளில் அமர்ந்து சுவாசத்தை சற்று சீர் செய்து கொள்ளலாம்.

இது குறித்து, ஜெயராஜ் குரூப் துணை தலைவர் பிரகாஷ் கூறுகையில், "ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பல நோயாளிகள் பரிதாபமாக இறந்து போவதை ஊடகங்கள் வழியாக அறிந்து மிக வேதனைப்பட்டோம். எனவே, நம்மால் முடிந்த உதவியை செய்ய நினைத்து, ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் அடங்கிய பேருந்துகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வழங்கலாம் என முடிவு செய்தோம்.

இதன் மூலம் ஒரே நேரத்தில் 14 நோயாளிகள் அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை பெற்றுக் கொள்ள முடியும். நோயாளிகளை இடமாற்றம் செய்யும்போது கூட இந்த ஆக்சிஜன் செறிவூட்டும் கருவி மின் துணை இல்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையுடன் இந்த ஆக்சிஜன் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதனை, 24 மணி நேரமும் மக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அர்ப்பணித்து இருக்கிறோம். கொரோனா தொற்று பாதிப்பு என்று முழுமையாக முடிகிறதோ, அதுவரை இந்த பேருந்துகள் மக்கள் பயன்பாட்டிற்காக மட்டும் இருக்கும்" என்று கூறினார்.

இந்த ஆக்சிஜன் பேருந்துகளை வடிவமைக்க சுமார் 20 லட்சம் ரூபாய் வரை செலவாகியுள்ளதாகவும், தங்களைப்போன்ற பல பெரு நிறுவனங்களும் கொரோனா பெருந்தொற்று நோயில் இருந்து மக்களை காக்கும் பணியில் தங்களால் முடிந்த இது போன்ற சிறு பங்களிப்புகளை மனமுவந்து செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Esakki Raja
First published: