இந்திய - சீன எல்லையில் நடைபெற்ற சண்டையில் இந்திய வீரர்கள் 20 பேரை சீன ராணுவத்தால் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்திய மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சீனப் பொருள்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக, நியூஸ்18 குழுமம் சார்பில் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில் 6,000 பேர் பங்கேற்றனர். அதில், 9 கேள்விகள் கேட்கப்பட்டன.
அந்த கருத்து கணிப்பில், வரும் காலங்களில் 70 சதவீத மக்கள் சீனப் பொருள்களைப் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்தனர். 91 சதவீத மக்கள் சீன ஆப்களை புறக்கணிக்கப்போவதாகவும், பிறரையும் அதேபோல செய்ய வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். 92 சதவீத மக்கள் சீனாவை நம்ப முடியாது என்று தெரிவித்தனர். சீன உணவுகளை 43 சதவீத மக்கள் புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர். 31 சதவீத மக்கள் உணவைப் புறக்கணிக்கத் தேவையில்லை என்றனர்.
சீனப் பொருள்களை விளம்பரப்படுத்துவதை பிரபலங்கள் தவிர்க்க வேண்டும் என்று 97 சதவீத மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாகிஸ்தானைவிட, சீனா இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக 92 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 52 சதவீத மக்கள், இந்தியாவுக்கு நண்பர்கள் இல்லை.
இந்தியா தன்னைத் தானே பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர். ட்ரம்பைவிட புதின் இந்தியாவுக்கு நெருக்கமான நண்பராக உள்ளார் என்று 19 சதவீத மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.