இந்தியா - சீனா இடையே லடாக் எல்லையில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக மோதல் சூழல் நிலவியது. கடந்த திங்கள் அன்று இரு தரப்பு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சீன தரப்பில் 35 பேர் இறந்திருக்கலாம் என்று அமெரிக்க உளவு நிறுவனங்கள் கூறியுள்ளன. ஆனால், சீனா இது தொடர்பாக வாய் திறக்கவில்லை.
மேலும், சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்களையும் சீனா விடுவித்துளது. இதற்கிடையே, சீன தயாரிப்பு பொருட்கள் மற்றும் சீன தயாரிப்பு செயலிகளை புறக்கணிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்துள்ளன.
இந்த நிலையில், சீனாவின் யுனான் மின்ஸு பல்கலைக்கழகத்தில் தமிழ்துறை தலைவராக இருக்கும் நிறைமதியின் பேஸ்புக் பக்கத்தில் அவரது பதிவுகளுக்கு, சீனாவுக்கு எதிராகவும், அவருக்கு எதிராகவும் பலர் கமெண்ட் செய்தனர்.
இதனால், வேதனை அடைந்துள்ள நிறைமதி வருத்தங்களுடன் ஒரு பதிவை எழுதியுள்ளார். “அரசியல் உலகின் மோதல், சர்சசை, போராட்டம் முதலியவை பொது மக்களுக்கு என்ன நன்மை கொடுக்கும்? இரு நாடுகளுக்கிடையே மோதல் நிகழ்ந்த போதெல்லாம் சிலர் என் முகநூல் பக்கத்தில் விமர்சனம் செய்து, ஏமாற்றுபவர், சதித்திட்டம் செய்பவர் போன்ற பெயர் என்னிடம் கொடுக்கிறார்கள். தமிழ் மொழி படித்து கற்றுக்கொடுப்பது என்ன தவறு?
உண்மையாகச் சொன்னால், ஆர்வம் தவிர, தமிழ் மொழி உயர்ந்தால் பல்கலைக்கழகத்தில் தமிழ் துறைக்குப் பொறுப்பான என் தொழில் வளர்ந்து, எங்கள் தமிழ் துறை மேலும் நீண்ட காலமாக நிலவும் எனும் எண்ணத்துடனும் இப்படி பாடுபட்டுப் படிக்கிறேன், முயற்சியுடன் வேலை செய்கிறேன். நண்பர்களுக்குப் பெருமையுடன் தமிழ் பற்றி அறிமுகப்படுத்துகிறேன். அத்துடன் “எங்கள் தமிழ் நாடு” என அடிக்கடி சொல்கிறேன். இப்படி தமிழைச் சீனாவில் வளர்க்கிறேன்.சீனாவில் ஆங்கிலம், ஜப்பானிய மொழி, ஜெர்மன், பாஷ்டோ, ஸபானிஷ் முதலிய மொழிகள் படிக்கப்படும் நிலையில், தமிழ் படிப்பதைப் புரிந்து கொள்வது இப்படி கடினம் ஏன்?
சாதாரண சீனராகிய நான் வேறு பல சீனர்களைப் போல சீன- இந்திய உறவு மேம்படுத்தப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன். இப்படி என்றால், எங்களுக்குப் பிடிக்கும் இரு நாடுகளும் நன்றாக வளரும்.” என்று தெரிவித்துள்ளார்.
நிறைமதி தமிழகர்களுக்கு ஏற்கனவே பிரபலமானவர். சீனாவில் தமிழ் ரேடியோ ஒன்றையும் நடத்தி தமிழையும், தமிழ் கலாசாரத்தையும் பரப்பி வருகிறார்.
குறிப்பாக சீன அதிபர் மாமல்லபுரம் வந்த போது, இவர் வெளியிட்ட வீடியோக்கள் மற்றும் ரேடியோ நிகழ்ச்சிகள் மிகவும் அதிகம் பேரைச் சென்றடைந்தது.
தற்போது நிறைமதி வெளியிட்டுள்ள பதிவிற்கும், தமிழர்கள் பலர் ஆதரவு அளித்துள்ளனர்.