லடாக் எல்லைப்பகுதியில் சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பிறகு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. சீனாவுக்கு நிகராக எல்லை நெடுக படைவீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததுடன், பாலங்கள் கட்டுவது, பாதைகளை செப்பனிடுவது என பல்வேறு பணிகளை இந்தியா போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் லே பகுதிக்கு மூன்றாவது பாதையை பாதுகாப்புத் துறை அமைக்க தொடங்கியுள்ளது.
நிமு-பதம்-சர்சா மார்க்கத்தில் இப்புதிய பாதையை இந்தியா அமைத்து வருகிறது. புதிய பாதையால் ஏற்கனவே உள்ள இரு பாதைகளைக் காட்டிலும் லே பகுதிக்கு ராணுவ தளவாடங்கள் வெகு எளிதாக கொண்டு செல்ல முடியும் என்றும் இதனால் பல மணி நேரப் பயணம் மீதமாகும் என்றும் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வாகனங்கள் செல்லக்கூடிய உலகின் மிக உயரமான கர்துங்க்லா பாதை வழியாக கடக்கும் இப்பாதை பல பனிக்கட்டி படலங்களை எளிதில் கடந்து செல்லக் கூடியதாகும்.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் இருந்து பத்தாயிரம் துணை ராணுவப்படை வீரர்களை உடனடியாக திரும்பப்பெற மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு மற்றும் மாநில அந்தஸ்தை ரத்து செய்யும் சட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதையொட்டி ஜம்மு காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர். தற்போது ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில் துணை ராணுவப்படையின் 100 கம்பெனிகளை, அதாவது பத்தாயிரம் வீரர்களை உடனடியாக திரும்பப்பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. காஷ்மீரின் தற்போதைய நிலையை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், இந்த முடிவை மேற்கொண்டுள்ளது.