ட்ரெண்டிங்கில் இடம்பிடித்த ரஜினியின் ஆவேச வார்த்தை

ரஜினிகாந்த்

ரஜினி சொன்ன சத்தியமா விடவே கூடாது என்ற ஹேஷ்டேக் இந்திய அளவிலான ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

  காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

  இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்து வருகிறது. விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கு உத்தரவிட்டனர். மேலும் தடயங்களை அழிக்க வாய்ப்பிருப்பதால் உடனடியாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  இதனிடையே இச்சம்பவத்தை நேரில் சென்று விசாரித்த நீதித்துறை நடுவரை காவலர் மிரட்டிய சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

  அவர் தனது ட்விட்டர் பதிவில், “தந்தையையும், மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாக கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக்கூடாது” என்று கூறி #சத்தியமா_விடவே_கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டார்.  ரஜினிகாந்த் ட்வீட் செய்த ஹேஷ்டேக் சில நிமிடங்களிலேயே இந்திய அளவிலான ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. இதற்கு முன்னதாக சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக #JusticeforJayarajAndFenix என்ற ஹேஷ்டேக்கும் சர்வதேச அளவில் கவனம் பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
  Published by:Sheik Hanifah
  First published: