சாத்தான்குளம் காவலர் வாக்குமூலம்...! 2 வருடங்களுக்கு பின் வெற்றிமாறன் பதிவிட்ட ட்வீட்

இயக்குனர் வெற்றிமாறன்

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் இயக்குநர் வெற்றிமாறன் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

 • Share this:
  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி அதிக நேரம் கடைதிறந்து வைத்திருந்ததாக ஜெயராஜ், பென்னிக்ஸ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.

  காவல்துறையினர் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இருவரும் உயிரிழந்தனர் என்று உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டிவந்தனர். சாத்தான்குளம் சம்பவத்துக்கு தேசிய அளவிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.

  இதற்கிடையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கைவிசாரித்துவருகிறது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் நீதித்துறை நடுவரின் அறிக்கையின் அடிப்படையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது.

  அதன் அடிப்படையில் சிபிசிஐடி விசாரணை தொடரலாம். டிஜிபியின் உத்தரவிற்காக காத்திருக்காமல் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாக விசாரணையை கையிலெடுக்க வேண்டும்’ என்றும் உத்தரவிட்டுள்ளது.

  சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணை நடத்திய நீதித்துறை நடுவர் பாரதிதாசன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு சமர்பித்திருக்கும் அறிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் இடம் பெற்றுள்ளன. அதில், “சாத்தான்குளம் காவல்நிலையத்தில் பணியாற்றிய நேரடி சாட்சியான தலைமைக்காவலர் ரேவதியிடம் விசாரணை நடத்தியதில், ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவலர்கள் விடிய விடிய கடுமையாக தாக்கியதையும், இதனால் காவல்நிலைய மேஜை மற்றும் லத்தியில் ரத்தக்கறை ஏற்பட்டதையும் தெரிவித்தார்.

  தலைமைக் காவலர் ரேவதி சாட்சியம் அளிக்கும் போது மிகுந்த அச்சத்துடனேயே இருந்தார். அவர் ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரம் கொடுக்கப்பட்டது. காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் விசாரணையை வீடியோ எடுத்தும் வாக்குமூலம் கொடுத்த ரேவதியை மிரட்டும் தொனியிலும் ஈடுபட்டனர். வாக்குமூலம் அளித்த ரேவதி கடைசியில், வாக்குமூலத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். மிகவும் சிரமப்பட்டே கையெழுத்தை பெற முடிந்தது” என்று நீதித்துறை நடுவர் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் சாட்சியம் அளித்த காவலர் ரேவதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ட்விட்டரில் கடந்த இரண்டு வருடங்களாக எந்த கருத்தும் பதிவிடாமல் இருந்த இயக்குநர் வெற்றிமாறன், நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமை காவலர் ரேவதி ஆகிய நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

  அதேபோல் ஜி.வி.பிரகாஷ், நடிகை ராஷி கண்ணா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் வாக்குமூலம் அளித்த காவலர் ரேவதியை பாராட்டி வருகின்றனர்.
  Published by:Sheik Hanifah
  First published: