விஜய்சேதுபதிக்கு வலுக்கும் எதிர்ப்பு: முத்தையா முரளிதரன் வாழ்க்கை கதை படத்தை கைவிட வலியுறுத்தல்

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, #ShameOnVijaySethupathi என்ற டிவிட்டர் ஹேஷ்டாக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

  • Share this:
இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்தவர். அவரது வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி ஸ்ரீபதி என்பவர் இயக்கும் "800" என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் அண்மையில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்தது.

இதனிடையே "800" திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என வலியுறுத்தி ஏராளமான தமிழ் அமைப்புகள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஈழ இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசுக்கு ஆதரவாக பேசிய முத்தையா முரளிதரனின் வாழ்க்கைப் படத்தில், தமிழ் உணர்வாளராக காட்டிக்கொள்ளும் விஜய் சேதுபதி எப்படி நடிக்கலாம் எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ஈழப் போர் நிறைவடைந்த 2009ம் ஆண்டு தான், தன் வாழ்நாளில் மிகச்சிறந்த நாள் என முரளிதரன் பேசிய வீடியோவையும் ஏராளமான தமிழ் தேசிய அமைப்பினர் பகிர்ந்து வருகின்றனர்.


இதனைதொடர்ந்து ShameOnVijaySethupathi என்ற டிவிட்டர் ஹேஷ்டாக் வாயிலாக தங்களது கண்டனங்களை தமிழ் அமைப்பினர் பதிவு செய்தனர். இனிமேல் விஜய் சேதுபதி மக்கள் செல்வன் இல்லை எனவும், அவரது படங்களை புறக்கணிக்கப் போவதாகவும், நக்கலடிக்கும் வகையில், அதேவேளையில் காட்டமாகவும் மீம்ஸ்-களை பகிர்ந்துள்ளனர். சிலர் ராஜபக்சே உடனும் விஜய் சேதுபதியை ஒப்பிட்டு விமர்சித்துள்ளனர்..
இதனால் இந்த சர்ச்சை தேசிய அளவு டிரெண்டிங்கில் முன்னிலை வகித்தது.
"800" திரைப்படத்துக்கு எதிர்மறையான கருத்துகள் வெளிவந்தாலும், மற்றொருபுறம் விஜய் சேதுபதிக்கு ஆதரவாகவும் ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். காந்தி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில், ஆங்கில நடிகர் பென் கிங்ஸ்லி நடிப்பதை ஏற்றுக்கொண்ட மக்கள், இலங்கை கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை கதையில் ஏன் தமிழ் நடிகர் நடிக்கக் கூடாது எனவும் வினவியுள்ளனர்.கலையிலும், விளையாட்டிலும் அரசியலை கலக்கக் கூடாது எனவும் விஜய் சேதுபதிக்கு ஆதரவாக குரல்கள் எழுந்துள்ளன. இதனால் WESUPPORTVIJAYSETHUPATHI மற்றும் WESTANDWITHVIJAYSETHUPATHI என்ற ஹேஷ்டாக்குகளும் டிவிட்டரில் டிரெண்ட் அடித்தன.

மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, முரளிதரன் பட சர்ச்சைக்கும் குரல் கொடுத்து, விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடம் எழுந்துள்ளது.
First published: October 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading