சுஷாந்த் சிங் மரணம் : நெருங்கிய தோழியிடம் 10 மணி நேரம் விசாரணை... அடுத்த கட்டம் என்ன?

சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேரும் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் மரணம் : நெருங்கிய தோழியிடம் 10 மணி நேரம் விசாரணை... அடுத்த கட்டம் என்ன?
  • Share this:
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது நெருங்கிய தோழியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக சல்மான் கான் உட்பட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணையின் அடுத்த கட்டம் என்ன?

சின்னத்திரையில் அறிமுகமாகி தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் உலகில் உச்சம் தொட்டவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்; தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

சுஷாந்த் சிங்கின் மரணத்தில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில், தூக்குக் கயிறு கழுத்தில் இறுக்கியதால் மூச்சு திணறி உயிரிழந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. சுஷாந்த்தின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார், அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்துவருகிறார்கள்.


மேலும், வியாழக்கிழமை, சுஷாந்தின் பி.ஆர். மேலாளர் ராதிகா நிஹலானி மற்றும் முன்னாள் மேலாளர் ஸ்ருதி மோடி ஆகியோரின் வாக்குமூலங்களையும் போலீசார் பதிவு செய்தனர். ஸ்ருதி மோடி 2019 ஜூலை முதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை சுஷாந்த் உடன் பணிபுரிந்ததால் அவரிடம் வாக்குமூலத்தை போலீசார் பெற்றுள்ளனர்.

அவரிடம், சமுதாய சேவைக்காக நேஷன் இந்தியா ஃபார் வேர்ல்டு என்ற அமைப்பை தொடங்க சுஷாந்த் ஆயத்த பணிகளை மேற்கொண்டு வந்ததாக கூறி உள்ளனர். சினிமாவைத் தாண்டி சமூகம் சார்ந்த பல விஷயங்களை செய்ய அவர் மன வருத்ததுடன் ஆலோசித்ததாக ஸ்ருதி மோடி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

சுஷாந்த் உடன் நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்ட நடிகை ரியா சக்ரவர்த்தியை பந்த்ரா காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த விசாரணையில், சுஷாந்தின் நடவடிக்கைகள் குறித்தும், அவருக்கு இருந்த மன உளைச்சல் குறித்தும், இருவருக்கும் இடையிலான உறவு குறித்தும் முழுமையாக விசாரிக்கப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.தோழி ரியா சக்ரவர்த்தியின் வாக்குமூலம், இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது சுஷாந்த் மரண சர்ச்சையில், முகாந்திரம் உள்ள சந்தேகங்களுக்கு போலீசார் விடை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே, சுஷாந்த் தற்கொலை செய்துகொள்வதற்கு 6 நாட்களுக்கு முன்பு, அவரது முன்னாள் மேலாளர் திஷா சலையன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சுஷாந்த்தின் தற்கொலைக்கும், திஷாவின் தற்கொலைக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமெடுத்துள்ளது. வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் உள்ளிட்டோர் கொடுத்த அழுத்தம் காரணமாக சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்த் சிங் நீக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேரும் சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது

சல்மான் கான் உள்ளிட்ட 8 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட என தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை விரைவில் நடக்கவுள்ளது. இந்நிலையில், சல்மான் கான் மீது அவரை வைத்து தபாங் படத்தை இயக்கிய அபினவ் சிங் காஷ்யப்பும் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ராம் லீலா, பாஜிராவ் மஸ்தானி ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்க சுஷாந்தை தான் முதலில் தேர்வு செய்ததாகவும், ஆனால் அவரை சல்மான் கான் உள்ளிட்டவர்கள் நடிக்கவிடவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். தொழில் போட்டியால்தான் தற்கொலைக்கு தூண்டப்பட்டு சுஷாந்த் மரணமடைந்துள்ளார் என பலரும் கூறி வரும் நிலையில், அந்த கோணத்திலும் விசாரணை நடத்தப்படும் என்று மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ் முக் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் மரண வழக்கை விசாரித்து வரும் மும்பை போலீஸ், வியாழக்கிழமை முன்னணி தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். சுஷாந்தை வைத்து 2 படங்கள் தயாரித்த ஒய்.ஆர்.எஃப். நிறுவனம், அவரை வைத்து மேலும் எத்தனை படங்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பது குறித்த தகவலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

சாதாரண நாட்களில் ஒரு நடிகர் தற்கொலை சம்பவம் அவரது குடும்பம், நட்பு வட்டாரத்தை மட்டுமே அதிரவைக்கும். ஆனால், கொரோனா காலத்தில் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்தின் மரணம் நாட்டையே அதிரவைத்துள்ளது.
First published: June 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading