தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். ஏப்ரல் 16-ம் தேதி காலை திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் அடுத்தநாள் (ஏப்ரல் 17) காலை 5 மணியளவில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருக்கு வயது 59.
விவேக்கின் மறைவு திரைத்துறையினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் க்ரீன் கலாம் என்ற அமைப்பை உருவாக்கி மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 1 கோடி மரங்கள் நடும் கனவுக்கு உயிர் கொடுத்து வந்த விவேக் இதுவரை 34 லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்திருக்கிறார். அவர் விட்டுச் சென்ற 1 கோடி மரக்கன்றுகள் நடும் பணியை திரையுலகினர், ரசிகர்கள் என பலரும் தற்போது கையிலெடுத்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி.அலுவலக வளாகத்தில் 59 மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளார்.
மற்ற நடிகர்கள் தங்கள் வீடுகளில் ஒன்றிரண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய நிலையில் 59-வது வயதில் அவர் மரணமடைந்ததை உணர்த்தும் விதமாக 59 மரக்கன்றுகளை நட்டு வைத்து வித்தியாசம் காட்டியுள்ளார் ரம்யா பாண்டியன். அவருடன் திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் உடனிருந்தார்.