அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில், மறைந்த நடிகர் விவேக் கம்பீரமாக இடம் பெற்றிருப்பது ரசிகர்களை நெகிழச் செய்திருக்கிறது.
தமிழில் காஞ்சனா படத்தைப் போல, அரண்மனை பேய் படமும் ரசிகர்களிடம் பிரபலமான ஒன்று. இதுவரை வெளியான அரண்மனை படத்தின் இரண்டு பாகங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. இயக்குநர் சுந்தர் சி இயக்கியிருந்த இந்தப் படத்தின் 3-ம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. மற்ற பாகங்களைப் போலவே சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
அரண்மனை 3-ம் பாகத்தில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் ஆகிய 3 கதாநாயகிகளும் நடித்துள்ளனர். இவர்களுடன் விவேக், யோகிபாபு ஆகியோர் காமெடி வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு இசை, சத்யா. அரண்மனை படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், மோஷன் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டன. அதில் ஆர்யா, சுந்தர் சி, ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு ஆகியோரின் தோற்றங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக வேட்டி, சட்டை, தோளில் துண்டு, முறுக்கு மீசை என விவேக்கின் படம் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
இதையடுத்து விவேக்கின் அந்தப் படம் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.