பில்லி, சூனியம் மோசடி... பிரபல சீரியல் நடிகை தற்கொலை... காதலர் கைது

Youtube Video

ஜேசல் சர்மாவின் ஆண் நண்பர் ஆதித்யா பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலமாகி விடலாம் என்று ஆசைவார்த்தை கூறி நடிகையிடம் பணமோசடி செய்துள்ளார்.

 • Share this:
  பில்லி, சூனியம் மோசடி... பிரபல சீரியல் நடிகை தற்கொலை... காதலர் கைதுமும்பையில் பிரபல சின்னத்திரை நடிகை சேஜல் சர்மா தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது காதலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சேர்ந்தவர் 25 வயதான சேஜல் சர்மா. நடிப்பு ஆசை காரணமாக மும்பைக்கு சென்றார். தானே, மிரா ரோடு பகுதியில் வாடகை வீட்டில் வசித்துக்கொண்டே சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். தோ ஹாப்பி ஹை ஜி என்ற இந்தி தொடர் வடஇந்திய மக்களின் பெரும் வரவேற்பை பெற்றதால் வெகு விரைவில் பிரபலமானார்.

  சில விளம்பரப் படங்களிலும் நடித்த அவர், ஆஸாத் பரிந்தே என்ற வெப் சீரிஸில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். யாரும் எதிர்பாராத விதமாக ஜனவரி மாதம் 24 ஆம் தேதி திடீரென தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். வழக்கு பதிவு செய்த மிரா ரோடு போலீசார், சேஜல் வீட்டில் இருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வந்தனர்.

  நடிகை சேஜல் சர்மா எழுதியிருந்த அந்தக் கடிதத்தில் தனிப்பட்ட காரணத்துக்காகத் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்ததாக கூறியிருந்தார். தனது மகள் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக சேஜல் தாய் போலீசில் புகார் செய்தார். மேலும் மகளின் செல்போனை கொடுத்து இதிலிருந்து ஏதாவது துப்பு கிடைக்கிறதா என பார்க்கச் சொல்லி உள்ளார்.

  நடிகை சேஜலின் செல்போன் ஆய்வு செய்த போலீசார், தற்கொலை செய்து கொண்ட அன்று, டெல்லியைச் சேர்ந்த மாடல் மற்றும் ஜிம் பயிற்சியாளர் ஆதித்யா வசிஷ்ட் என்பவருக்கு மட்டும் தொடர்ந்து போனில் பேசியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. நடிகை சேஜல் சர்மாவுக்கு மேலம் பிரபலம் ஆகி பாலிவுட் சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசை இருந்துள்ளது.

  இதை அறிந்த ஆதித்யா, பில்லி சூனியம் செய்தால் விரைவில் பிரபலம் அடைந்து விடலாம் என்றும் அதற்கு பணம் செலவாகும் என்று கூறியுள்ளார். அதற்கு சம்மதம் தெரிவித்த சேஜல் சர்மாவிடம் ஏராளமாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் தன்னிடம் உள்ள பணத்தை பறிக்கவே காதல், பில்லி சூனியம் என மோசடி செய்தது தெரிய வந்தது.  இதனால் ஜனவரி 24ஆம் தேதி ஆதித்யாவிடம் கடுமையாக சண்டை போட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையிலான காதல் முறிந்துள்ளது. இதை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான சேஜல் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது.

  இதையடுத்து நடிகை சேஜலிடம் பிரபலமாக்குவதாகக்கூறி பில்லி சூனியம் என பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டு, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.

  குறுகிய காலத்தில் சின்னத்திரையில் பிரபலமான நடிகை, மேலும் பிரபலமாகி சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டு பில்லி சூனியம் என பணத்தை இழந்து, மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

  மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vijay R
  First published: