THERE IS NO VACCINE FOR CORONA CORPORATION COMMISSIONER VAI ABH
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து என்பதை நம்பவேண்டாம்: மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கம்
மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் (கோப்புப்படம்)
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து வந்திருக்கிறது என்று ஆதாரப்பூர்வமற்ற தகவல்கள் பொதுவெளியில் பரப்பப்பட்டு வருகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆணையர் பிரகாஷ், சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடையும் நபர்களின் எண்ணிக்கை 57 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பொதுமக்களுக்கு சமூக இடைவெளியின் முக்கியத்துவம் புரிந்தாலே கொரோனாவுக்கான தீர்வு கிடைத்துவிடும் என்றும் கூறினார்.
2,77,371 பேருக்கு இதுவரை உளவியல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஆணையர் பிரகாஷ், கொரோனா வந்தால் அதை தைரியமாக எதிர்கொள்ள பொதுமக்கள் தயாராக வேண்டும் என்றும் தற்கொலை உள்ளிட்ட எதிர்மறை எண்ணங்கள் தேவையற்றது என்றும் கூறினார்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த 1,000 ஆசிரியர்கள் உளவியல் ஆலோசனை வழங்குவது, தொடர்புகளைக் கண்டறிவது உள்ளிட்ட கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறிய ஆணையர், தடுப்புப் பணிக்கு ஆசிரியர்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து வெளிவந்துள்ளது என்று ஆதாரப்பூர்வமற்ற முறையில் பொதுவெளியில் பரவும் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும் எந்த சந்தேகம், அச்சம் என்றாலும் மாநகராட்சியின் உளவியல் ஆலோசனை எண்களுக்கு அழைக்கலாம் என்றும் ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.