
- News18 Tamil
- Last Updated: May 22, 2021, 13:51 IST
மதுரை மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட நபர்களுக்கு இதுவரை, 2 லட்சத்து 70 ஆயிரத்து 381 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, 18 முதல் 45 வயதுள்ள நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
மதுரையில் 18 முதல் 45 வயது நபர்களுக்கு செலுத்துவதற்காக 38 ஆயிரம் கோவிஷீல்டு ஊசிகளும், 5 ஆயிரம் கோவாக்சின் ஊசிகளும் வந்திறங்கி உள்ளன. இருந்தும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மதுரையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் துவங்கவில்லை.
அவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதுவரை வழங்கப்படாததால் இன்னும் பணிகள் துவங்கவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகேயுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்த 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று நோயில் இருந்து தற்காத்து கொள்ளும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. எனவே, அரசு அறிவித்த உடனேயே அதை செலுத்திக் கொள்ளும் ஆர்வத்தில், ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கடந்து இரண்டு நாட்களாக வந்து கொண்டிருக்கிறோம். ஆனால், முறையான பதிலில்லாமல் எங்களை திருப்பி அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்” என்றனர்.
Must Read : கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா தொற்று... நகரங்களை நோக்கி வரும் கிராம மக்கள்..
மேலும், 18 - 45 வயது நபர்களுக்கு எப்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்பது குறித்து, சரியான அறிவிப்புகளையாவது அரசு வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.