விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர். சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மர்மம் நிறைந்த இன்னொரு அத்திப்பட்டியாக உள்ளது, குச்சம்பட்டி.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவன்-மனைவி மட்டுமே வசித்து வருகின்றனர். சிட்டிசன் படத்தில் வரும் அத்திப்பட்டி கிராமத்தை போல் மர்மம் நிறைந்த இன்னொரு அத்திப்பட்டியாக உள்ளது, குச்சம்பட்டி. இது குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
2 பேர் மட்டும் வாழும் அதிசய கிராமம்
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் குச்சம்பட்டி என்னும் கிராமம் உள்ளது.இக்கிராமம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பாக விவசாய தொழில் செல்வ செழிப்பாக இருந்தது. இதனால் இந்த ஊரில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் காலத்தின் மாற்றம் காரணமாக விவசாயத்தில் நட்டம், பெரும் பஞ்சம் நிலவிய காரணத்தினால் இக்கிராம மக்கள் வேலை வாய்ப்பை தேடி சென்னை, மதுரை, கோவை என வெளி மாவட்டங்களுக்கு குடிப்பெயர்ந்து விட்டனர்.
இதனால், தற்போது அக்கிராமத்தில் வீடுகள் பெரும்பாலும் இடிந்தும், சிதலமடைந்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. ஒரு வீட்டில் மட்டும் ஊரின் தலைவராக இருந்த 77 வயதான சித்த வைத்தியர் போஸ் மற்றும் 67 வயதான அவரின் மனைவி ராஜூ தம்பதியினர் தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் இக்கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் வைகாசி மாதம் நடைபெறும். பொங்கலுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை ஊரை காலி செய்து சென்ற கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
உதவி தொகை வழங்க கோரிக்கை
இதுகுறித்து பேசிய குச்சம்பட்டி ஊர் தலைவர் போஸ் மற்றும் அவரது மனைவி ராஜூ கூறியதாவது, இந்த ஊரில் 80-க்கும் மேற்பட்ட வீடுகளில் 300 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்தனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நிலவிய பஞ்சத்தில் ஊரில் உள்ள அனைவரும் வீட்டை காலி செய்து விட்டு வெளியூர்களுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் எங்கள் குடும்பம் மட்டும் ஊரை விட்டு செல்லாமல் இருந்து வாழ்ந்து வருகிறோம்.
இக்கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. அன்றாடம் உணவுக்கு கூட மிகவும் கஷ்டப்படுவதாக வேதனையுடன் கூறுகின்றனர். மேலும், சித்த வைத்தியம் தொழில் மூலமாக கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறோம் என்கிறார் ஊர் தலைவரான போஸ். முதியோர் உதவித்தொகை இன்னும் கிடைக்கவில்லை என கண்ணீர் மல்க கூறினார் அவரது மனைவி ராஜூ.
அ.மணிகண்டன் -விருதுநகர் -செய்தியாளர்