தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராம்கோ சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் தனது சொந்த செ
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ராம்கோ சிமெண்ட் உற்பத்தி நிறுவனம் தனது சொந்த செலவில் மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி செய்து தினசரி 48 ஆக்சிஜன் சிலிண்டர்களை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. இக்குழுமத்தின் சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
ரூ.50 லட்சம் மதிப்பில் உற்பத்தி மையம்
முதல் முறையாக தனது ஆலையில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் புதிய மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை நிறுவி ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியுள்ளது 60 ஆண்டுகள் பழமையான ராம்கோ சிமெண்ட் ஆலை. நாளொன்றுக்கு 45 லிட்டர் திரவ ஆக்சிஜன் கொள்ளளவு கொண்ட 48 சிலிண்டர்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இது வாயு வடிவத்தில் 7000 லிட்டருக்கு சமமாகும்.நிமிடத்துக்கு 10 லிட்டர் என்ற விகிதத்தில், ஒரு சிலிண்டர் ஒரு நோயாளிக்கு 10 முதல் 12 மணி நேரம் வரை பயன்படுத்த முடியும்.இந்த ஆலையில் இருந்து தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜனை வழங்குவதன் மூலம், ஒவ்வொரு நாளும் சுமார் 24 உயிர்களை காப்பாற்ற முடியும் என கூறப்படுகிறது.இந்த ஆலையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் ராஜபாளையம், விருதுநகர், சிவகாசி, அருப்புகோட்டை மற்றும் சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை உடனடியாக அனுப்பி வைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் ராம்கோ குழுமம் இணைந்து வாட்ஸ் ஆப் குழுவை தொடங்கியுள்ளது.
மேலும் 2 புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம்
இதுகுறித்து பேசிய ராம்கோ சிமெண்ட் குழுமத்தின் செயல் தலைவர்,ராமலிங்கம் கூறுகையில்,கொரோனா காலத்தில் மாவட்ட மக்களின் நலன் கருதி முதன் முதலாக எங்களது ஆலையில் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிட்டில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையம் நிறுவப்பட்டுள்ளது.இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மட்டுமே தேவைக்கு ஏற்ப விநியோகம் செய்து வருகிறோம்.மேலும், ஆக்சிஜன் தேவை அதிகமானால் கூடுதலாக 2 புதிய ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்கும் பணிகளும் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.
மணிகண்டன்-செய்தியாளர்-விருதுநகர்