தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவால் மண்பாண்ட தொழில் முடங்கிவிட்டது என்று குமுறிவெடிக்கிறார்கள் விழுப்புரம் அகரம் பகுதி மக்கள்.
விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள
தமிழகத்தில் பரவி வரும் கொரோனாவால் மண்பாண்ட தொழில் முடங்கிவிட்டது என்று குமுறிவெடிக்கிறார்கள் விழுப்புரம் அகரம் பகுதி மக்கள்.
விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது அகரம் என்ற பகுதி. இங்கு, சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மண்பாண்டம், தண்ணீர் பானை, சட்டி போன்ற பொருட்கள் செய்வதுதான் இம்மக்களின் தொழில்.
ஆனால், தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது என்கிறார்கள்.
காரணம், கோடை மாதங்களான மார்ச், ஏப்ரல், மே மாதங்களில்தான் ‘ஏழைகளின் குளிர்சாதனப் பெட்டி’ என அழைக்கப்படும் மண்பானைகள் அதிகளவில் விற்பனையாகும். வீட்டில் என்னதான் ஃபிரிட்ஜ் இருந்தாலும் மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது தனிச்சுவை தான். இதனை வாங்க யாரும் முன் வருவதில்லை என்கிறார்கள்.
இதைப்பற்றி அவர்களிடம் நாம் கேட்டபோது,“அதிகளவில் பொருட்கள் விற்பனையாகும் காலம். ஆனால், தற்போது கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலைக் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து வசதிகள் குறைவாகி, மண்பாண்டங்களை வெளி மாவட்டங்களுக்கும் ஊர்களுக்கும் எடுத்துச் செல்ல முடியவில்லை. கடைகளுக்கும் விடுமுறை அளித்துள்ளதால் தங்களுக்கு போதிய வருமானம் இல்லை. வாடிக்கையாளர்களும் சரியாக வருவதில்லை.
தற்போது ,கொரோனாவால் கடைகளின் நேரங்கள் அடிக்கடி மாற்றப்படுவதால், வெளியூர்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களின் வரத்தும் குறைந்துள்ளதால் எங்களின் பொருட்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்துள்ளது” என்கிறார்கள் வேதனையாக.
விழுப்புரத்தில் குறைந்தபட்சம் இரண்டு வருடமாக லட்சதீபம் ஏற்றப்படாததால் இதிலும் இவர்களுக்கு பாதிப்பு. மேலும் மண்பானைகள், சமையல் பானைகள், குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் சில கலைப்பொருட்களையும் செய்து தங்களது விற்பனைக் கூடங்களில் வைத்துள்ளார்கள்.
இவர்களது முக்கிய பாதிப்பே, பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ளதுதான். இது, இவர்களது வருமானத்தை முற்றிலும் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல், இங்கே தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருட்கள் பிற மாவட்டங்கள் உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது அதுவும் தற்போது தடைப்பட்டுள்ளது.
“இது அனைத்தும் சீரான நிலைக்கு திரும்பும் வரை அரசாங்கம், நிதிவுதவி அளித்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என கோரிக்கை வைக்கின்றனர்.
செய்தியாளர்: சு.பூஜா, விழுப்புரம்