காய்கறி, பழம், மளிகைக் கடைகள் போன்றவை மதியம் 12 மணிவரை தான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ராமநாதபுரம் வெள்ளிப்பட்டணத்தில் பலச்சரக்கு கடை வைத்
காய்கறி, பழம், மளிகைக் கடைகள் போன்றவை மதியம் 12 மணிவரை தான் இயங்க வேண்டும் என்று தமிழக அரசு கட்டுப்பாடு விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இதுகுறித்து, ராமநாதபுரம் வெள்ளிப்பட்டணத்தில் பலச்சரக்கு கடை வைத்துள்ள சக்தி நம்மிடம் பேசும்போது, “கடந்த வருடம் போடப்பட்ட ஊரடங்கால் பல பிரச்சனைகளை சந்தித்தோம். அதிலிருந்தே, இன்னும் மீண்டு வரவில்லை. வட்டிக் கட்ட முடியவில்லை. பல பிரச்சனைகளிலிருந்து வெளிவரவில்லை.
வியாபாரிகள் வட்டி கட்டவில்லை. வரி கட்டவில்லை இன்னும் எதுவும் செய்யாமல் இருக்கும்போது அடுத்த ஊரடங்கு அறிவிப்பால் இன்னும் பிரச்சினைகள் அதிகமாகும். ஊரடங்கு கட்டுப்பாடுகளிலிருந்து ஓரளவிற்கு தளர்வு அளித்தால் மக்கள் கொஞ்சம் ஃப்ரீயாக இருப்பார்கள்.
கொரோனாவிலிருந்து தப்பிக்கிறார்களோ என்னவோ பசியிலிருந்து தப்பிப்பார்கள். கையில் பணம் காசு கிடையாது. எல்லோரும் சாப்பிட வேண்டும்.
நாளையில் இருந்து பன்னிரெண்டு மணிக்கு கடைகளை அடைக்கும் கட்டுப்பாடு வரவிருக்கும் நிலையில் அதனை 3 மணி வரை என்று மாற்றினால் மக்களும் கொஞ்சம் ஃப்ரீயாக வந்து செல்ல ஏதுவாக இருக்கும்.
ஏனெனில், காலை 6 மணியிலிருந்து 10 மணிக்குள் எழுந்து என்ன ஏது என்று தொழில் செய்வதற்கு சிரமப்படுவார்கள். மக்களிடம் இருந்து காசு வாங்கணும், ஒரு வியாபாரி தொழிலாளிக்கு காசு கொடுக்கணும். அதற்கு அவர் ஒரு பாதி நேரமாவது வேலை பார்க்கணும்.
12 மணி வரை வேலை பார்ப்பதற்கு என்ன சம்பளம் கொடுப்பது, எப்படி வேலை வாங்குவது, என்ன வேலை வாங்குவது. அதனால், 3 அல்லது 5 மணி வரை நீட்டிக்க வலியுறுத்துங்கள். அப்போதுதான், மக்களும் சிரமப்படாமல் வருவார்கள். வியாபாரிகள் வருமானம் ஈட்ட முடியும். அரசாங்கத்திற்கு வரி கட்ட முடியும்” என்கிறார் கோரிக்கையாக.
ஓம்சக்தி நகரில் பழக்கடையில் வேலை பார்க்கும் ஜாஹிர் கூறியதாவது, ‘காலை 6 மணிக்கு திறந்து 12 மணிக்கு முடிக்க வேண்டும் என்பது சிரமமாக இருக்கிறது. இதனால் ரொம்ப நஷ்டம் ஏற்படுகிறது.
பழங்களை அடுக்குவதற்கே 2 மணி நேரம் ஆகிவிடும். திரும்ப அதனை எடுத்து வைக்கவே நேரம் சரியாக இருக்கும். அதனால் அரசானது இந்த நேரம் கட்டுப்பாட்டை கொஞ்சம் நீட்டித்து கொடுத்தால் நல்லாயிருக்கும்.
அரசின் அறிவிப்பானது மக்களின் நலனுக்காக என்றாலும், எங்களின் வியாபாரத்திலும் வாழ்வாதாரம் பாதிக்காத அளவில் செய்து கொடுத்தால் நன்றாயிருக்கும். இப்போது புதிதாக வந்துள்ள அரசாவது எங்கள் மீது கருணை காட்ட வேண்டும்’ என்று தெரிவித்தார்.