இந்தியன் ஃபிட்னஸ் அசோஷியேசன் கீழ் இயங்கும் ராமநாதபுரம் மாவட்ட பாடிபில்டிங் மற்றும் ஃபிட்னஸ் அசோஷியேசன் செயலாளரும் ஃப்ளாஷ் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பயிற்சியாளருமான சி.எஸ்.ஷைன் கொரோனா ஊரடங்கு தொடர்பாக நம்
இந்தியன் ஃபிட்னஸ் அசோஷியேசன் கீழ் இயங்கும் ராமநாதபுரம் மாவட்ட பாடிபில்டிங் மற்றும் ஃபிட்னஸ் அசோஷியேசன் செயலாளரும் ஃப்ளாஷ் ஃபிட்னஸ் ஸ்டுடியோவின் பயிற்சியாளருமான சி.எஸ்.ஷைன் கொரோனா ஊரடங்கு தொடர்பாக நம்மிடம் பேசினார். அப்போது அவர், ‘முதல் அலையிலேயே நாங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம். ஏனெனில், எங்களின் ஜிம் அமைப்பு சாதாரண முதலீட்டில் அமையவில்லை. ராமநாதபுரம் மாவட்டத்திலேயே விலையுயர்ந்த சாதனங்கள் வைத்து நடத்தி வருகின்றோம். 2,000 சதுர அடி கொண்ட ஜிம். கிட்டத்தட்ட 20 முதல் 25 லட்ச ரூபாய்க்கு முதலீடு செய்துள்ளோம். மாத வாடகையே 40,000 ரூபாய்.
அரசானது கடந்த ஊரடங்கின்போதும் எங்களை கண்டுகொள்ளவில்லை. அனைத்து துறைகளிலும் இயல்பு நிலை வந்த பின்னே இறுதியாக நாங்கள் திறந்தோம். ஆனால், முதலில் மூடுவதும் நாங்கள் தான். எந்தவித சலுகைகளும் இல்லை. சினிமாத்துறையில் இருந்து அனைத்து விளம்பரங்களிலும் ஃபிட்னஸை பெரியளவில் காண்பிக்கின்றனர். அந்த அளவில் ஃபிட்னஸ் வளர்ந்துள்ளது. இருந்தபோதிலும், எங்களை ஒரு பொழுதுபோக்கு அங்கமாக தான் பார்க்கின்றனர்.
இதனை நம்பி பல்லாயிரம் பேர் இருக்கின்றோம். பயிற்சியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். அவர்களுக்கு குடும்பங்கள் இருக்கிறது. இது மற்ற துறைகள் போல காலை 10 மணிக்கு சென்று மாலை 5 மணிக்கு வர இயலாது.
எங்களுடைய பணியானது அனைவரும் எழுவதற்கு முன் தொடங்கி தூங்கிய பிறகு தான் முடிவடையும். அரசிடம் நாங்கள் பலவித கோரிக்கைகளை வைத்தோம். ஆனால், காலதாமதமாக இறுதியாக எங்களுக்கு செய்தனர். அதிலும் வாழ்வாதாரத்திற்கான எந்தவித சலுகையும் வழங்கவில்லை.
கட்டிடத்திற்கான வாடகை சலுகை, குடும்ப அட்டை வைத்து சலுகை, மாதா மாதம் குறிப்பிட்ட நிதியுதவி என எந்தவித உதவியும் அளிக்கவில்லை. நாங்கள் ஜிம்மை வங்கிக்கடன் பெற்றுதான் நிறுவியுள்ளோம். கொரோனா முதல் அலை பரவலில் மூன்று மாத காலம் நிறுத்தி வைத்தனர். ஆனால், நாங்கள் அதனை ஆறு மாதங்களாக கட்டினோம். வங்கியில் கேட்டதற்கு இது மத்திய அரசு கீழ் இயங்குவது. நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் கடனை கட்டித்தான் ஆக வேண்டும் என்றனர்.
குறைந்த பட்சமாக இவ்வளவு வட்டி கட்டியுள்ளோம். அதற்காக வட்டிக்குறைப்போ சலுகையோக்கூட எதுவும் இல்லை. இப்போது, புது ஆட்சி மாற்றம் வந்துள்ளது. இந்த அரசாவது, எங்களை கொஞ்சம் கருத்தில் கொள்ளும் என நம்புகிறோம். நாங்கள் எங்களது குடும்பத்தை பார்த்துக்கொள்ள வருமானம் வேண்டும். குழந்தைகள் படிப்பு, பண்டிகை என அடுத்தடுத்து வந்தபோதிலும் அதில் கவனம் செலுத்த இயலவில்லை.
இந்த ஊரடங்கு போடுவதற்கு ஒரு மாதம் முன்பே அனைவரும் பயப்பட தொடங்கிவிட்டனர். அதனால், ஜிம்மில் எண்ணிக்கை என்பதே சொல்லும்படியாக இல்லை. இந்த மாதிரி நேரத்தில் கூட்டத்திற்கு வாய்ப்பே இல்லை.
அதிகபட்சமாக ஒருவர் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்வார். அந்த நேரத்திலும் அரசு கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகள் கிருமி நாசினி பயன்படுத்துதல், தனிமனித இடைவெளி என அனைத்தையும் பின்பற்றி நடத்தி வந்தோம்.
ஒருவருக்கும் மற்றவருக்கும் இடையில் 100 சதுர அடி இடைவெளி வைத்து நடத்தினோம். சாதனங்கள் அமைவு கூட அவ்வாறு தான் அமைத்திருந்தோம். அப்படியிருந்தும், இங்குதான் அதிகம் இந்த தொற்று பரவுகிறது என்று சொல்லுவது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. இதனை எங்களால் ஏற்க முடியவில்லை.
தொற்றுக்காலத்தில் இவ்வாறு தான் இருக்க வேண்டுமென்றாலும், வாழ்வாதாரம் அதிகம் பாதிக்கப்படுகிறது. ஏனெனில், எங்களால் வேறு எந்த பணிக்கும் தற்போது சென்று சேர இயலாது. நாங்களும் பட்டத்தாரிகள் தான். பயிற்சி சான்றிதழ்கள் வைத்துள்ளோம் என்றாலும் எந்த தனியார் நிறுவனத்திலும் சேர முடியாது. ஏனெனில் சேரும்போதே, ஜிம் திறந்தால் போய்விடுவீர்களா என்ற கேள்வி தான் முன்னிலை வகிக்கும்.
இதில், என் மனைவியும் பெண்களுக்கு பயிற்சி வழங்குகிறார்கள். அவர்களும் வேறு பணிக்கு செல்ல இயலாது. நாங்கள் எல்லோரும் இதில் எங்களை ஈடுபடுத்தி விட்டோம். இனிமேல் ஒரு மாத சம்பளம் என எங்களால் பணி தேட இயலாது. எங்கு சென்றாலும், நீங்கள் ஒரு சுய தொழில் வைத்துள்ளீர்கள் என்றுதான் நிராகரிக்கப்படுவோம். அதனால், நாங்கள் என்ன நிலை வந்தாலும் இதில் தான் இருந்தாக வேண்டும்.
வாடகை, குடும்ப செலவு, சாதனங்கள் பராமரிப்பு போன்றவற்றை செய்ய எங்கு செல்வது. எந்தவொரு வருமானமும் இல்லை. அரசிடம் நாங்கள் வைக்கும் வேண்டுகோள், மற்ற துறைகளுக்கும் தொழில்களுக்கும் வழங்கும் சலுகைகள், தளர்வுகள் போன்று எங்களுக்கும் வழங்க வேண்டும்.
குறைந்தபட்சமாக 20 நபராது வருகை தந்தால் எங்களது வாழ்வாதாரமும் நல்லாயிருக்கும். எங்களுக்கு இனிமேல் என்ன செய்ய வேண்டுமென்று கூட தெரியவில்லை. திரையரங்கு, மால் போன்றவற்றோடு ஜிம்மை சேர்க்க வேண்டாம். இது எங்களுடைய தாழ்மையான வேண்டுகோள்.
உடற்பயிற்சி கூடம் என்பது உடற்பயிற்சி மட்டுமல்லாது நல்லொழுக்கம் முதல் அனைத்தையும் சரியாக கற்றுக்கொடுக்கும் இடம். அதனால், தயவுசெய்து இதனை ஒரு ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டாக எடுத்து கொண்டு, எங்களது துறைக்கு குறிப்பிட்ட தளர்வுகளாவது வழங்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.