தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மே 10-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தின் பாதிப்பை சமாளிப்பதற்க
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், தமிழக அரசு மே 10-ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தி உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தின் பாதிப்பை சமாளிப்பதற்கு தமிழக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையாக ரூபாய் 4,000 வழங்குவதற்கான திட்டங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வீதிக்கு வீதி ஆதரவற்றவர்களையும் கைவிடப்பட்டவர்களையும் நாம் காணமுடியும். ஊரடங்கு இல்லாமல் சாதாரண நாட்களில், ஓரிரு தன்னார்வலர்கள் வழங்கும் உணவையும் கோயில்களில் வழங்கும் அன்னதானத்தையும் சாப்பிட்டும் தன் பசியைப் போக்கிக் கொண்டிருந்தனர்.
தற்போது, கோயில்கள் மூடப்பட்டதாலும் முழு ஊரடங்கு காரணத்தினாலும் தொற்று பரவும் என்ற அச்சத்திலும் உணவு வழங்கிக் கொண்டிருந்த ஓரிரு தனிப்பட்ட தன்னார்வலர்களும் உணவு வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
இதனால், ஆதரவற்றவர்கள் உணவின்றி தவிக்கின்றனர். இந்த சூழ்நிலையிலும் சில தொண்டு நிறுவனங்கள் முன்வந்து, அவர்களால் முடிந்த உணவுகளைப் பல ஆதரவற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.
கடந்த அமாவாசை நாளன்று ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்த ஆஞ்சநேயா தொண்டு நிறுவனக் குழுமம் கோவையிலுள்ள ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்தனர்.
இதுகுறித்து ஆஞ்சநேயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாக அறங்காவலர் பத்மஜா முருகையன் நம்மிடம், "எங்கள் தொண்டு நிறுவனத்தின் சார்பாக வீதியில் ஆதரவின்றி தவிக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முதியவர்களுக்கும் ஆடைகள், மருந்துகள் வழங்குவது, முடிகள் வெட்டி குளிக்க வைப்பது போன்ற செயல்களைச் செய்து வருகிறோம்.
தற்போது, அமாவாசை தினத்தன்று உணவு வழங்கிக் கொண்டிருக்கிறோம். அமாவாசை நாளன்று பலரும் நல்ல உணவு கிடைக்காதா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் ஆதரவற்றவர்களுக்கு மாதந்தோறும் அமாவாசை அன்று அன்னதானம் வழங்கி வருகிறோம்.
கடந்த வருடம் ஆடி அமாவாசை அன்று தொடங்கினோம். தற்போது, 11-வது அமாவாசை அன்று கோவையில் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
இதைத் தவிர, கோவை அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்றவர்களும் கைவிடப்பட்டவர்களும் மிகவும் கஷ்ட நிலையில் இருப்பார்கள்.
அவர்களின் மரண நேரம் என்பது மிகவும் சித்திரவதை அளிக்கக்கூடியது. அதுபோன்று ஆதரவற்றவர்களை, அவர்களின் மரண நேரத்தில், அவர்களின் நிழலான பகுதிக்குக் கொண்டு சென்று உயிர் பிரியும் வரை அருகிலிருந்து பார்த்துக்கொள்வோம். உயிர் பிரிந்த பின்பு ஏதேனும் அறக்கட்டளையின் கீழ் ஆதரவற்ற சடலங்களைத் தகனம் செய்து வருகிறோம்.
இதுவரை, ஆதரவற்றவர்கள் மரண நேரத்தை நேரில் யாரும் கண்டதில்லை. ஆனால்,தற்போது எங்களது ஆஞ்சநேயா தொண்டு நிறுவனத்தின் கீழ், ஆதரவற்ற அவர்களின் மரணத்தை வீடியோ எடுத்து அதன் மூலமாக மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் அரசாங்கத்துக்கும் விழிப்புணர்வு செய்து கொண்டிருக்கிறோம்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் ஆதரவற்றவர்களுக்கு என்று தனி பராமரிப்பு இல்லம் ஏற்படுத்தவில்லை என்றாலும், நாங்கள் எங்களது சொந்த பணத்தில் கோவை கிணத்துக்கடவு பகுதியில் ஒன்றரை ஏக்கரில் ஆதரவற்றோர் இல்லம் அமைத்து, ஆதரவின்றி தவிக்கும் நபர்களைக் கூட்டிச்சென்று பராமரிக்கும் பணிகளை தொடங்கி உள்ளோம்.
மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஆதரவற்ற மனிதர்கள் இறக்கும் தருவாய் மிகவும் கொடுமையானது. நம்மால் முடிந்த உதவியாக ஆதரவற்றவர்கள் மற்றும் மனநிலை பாதிக்கப்பட்டவர்களின் மரண நேரத்தில் நாம் உதவ வேண்டும்.
மக்கள் அனைவரும் ஒரு சதவீத அளவாவது இதுபோன்ற மக்களைக் கவனிக்க வேண்டும். அவர்களுக்குச் சேவை செய்யும் நோக்கில், உதவி செய்ய வேண்டும் என்று ஆஞ்சநேயா தொண்டு நிறுவனம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.