
- News18 Tamil
- Last Updated: April 22, 2021, 18:12 IST
மாஸ்டர் படப்பிடிப்பில் நடிகர் விஜய்யுடன் நடந்த நெகிழ்ச்சி தருணத்தை தற்போது படங்களுடன் நினைவுக்கூர்ந்துள்ளார் அப்படத்தின் இணை எழுத்தாளரும் இயக்குநருமான ரத்ன குமார்.
விஜய்யின் மாஸ்டர் இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதாவது பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மாஸ்டர் வெளியான 16-ம் நாள் ஓடிடி-யில் வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும் திரையரங்கில் கூட்டம் குறையாமல் இருந்தது. கொரோனாவுக்குப் பிறகு திரையரங்கில் வெளியான பெரிய படமான மாஸ்டர், பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அதோடு நல்ல கதை மற்றும் சிறந்த திரைக்கதைக்காக விஜய் ரசிகர்களால் பாராட்டப்பட்டது. இந்நிலையில், மாஸ்டர் பட குழுவில் இடம் பெற்றிருந்த, ஒரு பகுதியாக இருந்த ரத்ன குமார், தனது பிறந்தநாளை விஜய் மற்றும் மாஸ்டர் குழுவினருடன் கொண்டாடிய த்ரோபேக் படங்களை பகிர்ந்துள்ளார்.
படங்களைப் பகிர்ந்துக் கொண்ட ரத்னா, ”கேக் வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து, வெட்டும் முன் கும்பிட்ட தருணம். என் வாழ்க்கையில் முதல் முறையாக எனது பிறந்த நாள் மறக்கமுடியாததாக மாறியது. விஜய் சார், நண்பன் லோகேஷ், ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்