கவினுக்காக சிவகார்த்திகேயன் பாடிய கலக்கலான பாடல் ரீலீஸ்

கவின் நடித்துள்ள லிப்ட் படத்தில் சிவகார்த்திகேயன் பாடியுள்ள ‘இன்னா மயிலு’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இதையடுத்து படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியாவுடன் காதலில் விழுந்தார். இந்நிகழ்ச்சி கவினை அதிக ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது என்று கூட கூறலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பணியாற்றிய கவின் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் லிப்ட் என்ற படத்தில் நடித்தார். த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படத்தில் அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரிட்டோ மைக்கேல் இசையில் சிவகார்த்திகேயன், பூவையார் உள்ளிட்டோர் பாடியிருக்கும் இந்தப் பாடலை சென்னைத் தமிழில் எழுதியுள்ளார் நிஷாந்த். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 11 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை அடுத்து நெல்சன் திலீப் குமார் இயக்கும் விஜய்யின் 65-வது படத்திலும் கவின் உதவி இயக்குநராக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

Published by:Sheik Hanifah
First published:April 22, 2021, 18:14 IST